"சுதந்திரத்தை பெற்று தந்த தியாகிகளை நினைவு கூர்வோம்" – பிரதமர் மோடியின் சுதந்திர தின உரை!

ஆகஸ்ட் 14ஆம் தேதி பிரிவினை நினைவு தினமாக அனுசரிக்கப்படும் என தெரிவித்துள்ள பிரதமர் மோடி, 100 லட்சம் கோடி ரூபாய் மதிப்பில் உட்கட்டமைப்புகளை மேம்படுத்தி வேலை வாய்ப்புகள் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்துள்ளார்.

டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றி வைத்த பிறகு நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர், சுதந்திரத்தை பெற்று தந்த தியாகிகள் அனைவரையும் நினைவு கூர்ந்தார்.

அப்போது, ஒலிம்பிக் அரங்கில் இந்தியாவை பெருமை அடைய வைத்த வீரர், வீராங்கனைகளுக்கு பிரதமர் மோடி கரவொலி எழுப்பினார்.


தொடர்ந்து பேசிய பிரதமர், இனி ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 14ஆம் தேதி பிரிவினை நினைவு தினமாக அனுசரிக்கப்படும் என்றும் இந்த நாளில் பிரிவினையின்போது, உயிர் தியாகம் செய்தவர்களுக்கு மரியாதை செலுத்துவோம் என்றும் தெரிவித்தார்.

கொரோனா காலத்தில் சிறப்பாக பணியாற்றிய மருத்துவர்கள், செவிலியர்கள், முன்களப் பணியாளர்கள், தடுப்பூசி தயாரித்தவர்களுக்கு பிரதமர் நன்றி தெரிவித்தார்.

மிக குறைந்த காலத்தில் இந்தியாவில் கொரோனா தடுப்பூசி உற்பத்தி செய்யப்பட்டுள்ளது என்றும் உலகிலேயே மிகப்பெரிய கொரோனா தடுப்பூசி இயக்கத்தை இந்தியா முன்னெத்து வருவதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.

புதிய இந்தியாவை கட்டமைக்க அடுத்த 25 ஆண்டுகளில் நாம் ஒரு நிமிடத்தைகூட வீணாக்காமல் உழைக்க வேண்டும் என பிரதமர் கேட்டுக் கொண்டார்.

புதிய இலக்குகள், புதிய கொள்கைகள், புதிய சிந்தனைகள் என்று இந்தியர்கள் தங்களை தயார்படுத்த வேண்டும் என அறிவுறுத்தினார்.

அனைத்து கிராமங்களிலும் 100 சதவீதம் சாலை வசதிகளையும், நாட்டு மக்கள் அனைவருக்கும் 100 சதவீதம் மருத்துவ காப்பீட்டையும் உறுதிப்படுத்த வேண்டும் என்றும் இந்தியாவின் கிராமப்புறங்கள் டிஜிட்டல் தொழில் முனைவோர்களை உருவாக்கி வருகின்றன என்றும் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.

வளர்ச்சிக்கான பயணத்தில் இந்தியா, கியரை மாற்றி வேகமெடுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என்றும், கடந்த 7 ஆண்டுகளில் காலாவதியான, காலத்திற்கு ஒவ்வாத பல சட்டங்களை நீக்கியுள்ளதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.

100 லட்சம் கோடி ரூபாய் மதிப்பில் செயல்படுத்தப்படும் “பிரதமரின் கதி சக்தி” எனும் திட்டம் மூலம் நாட்டின் உட்கட்டமைப்புகள் மேம்படுத்துவதோடு, வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும் என பிரதமர் நம்பிக்கை தெரிவித்தார்.

மத்திய அரசின் சீர்த்திருத்த நடவடிக்கைகள் எலக்ட்ரானிக் முறையில் புத்தெழுச்சியை ஏற்படுத்தியுள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.

இந்தியாவில் பரந்து விரிந்து கிடக்கும் கடல் வளத்தை பயன்படுத்த ஆரம்பித்துள்ளதாகக் கூறிய பிரதமர், நதிகள், கடலில் குப்பைகளை கொட்டும் போக்கை நிறுத்த வேண்டும் என அறிவுறுத்தினார்.

விளையாட்டு மட்டுமின்றி அனைத்து துறைகளிலும் பெண்களின் சமமான பங்களிப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் பெண்களின் சுய முன்னேற்றத்திற்கு அரசு மட்டுமின்றி சமூகமும் உதவ வேண்டும் என்றும் பிரதமர் கேட்டுக் கொண்டார்.

 

Exit mobile version