தீவிரவாதத்தை ஆதரிக்கும் நாடுகள் தனிமைப்படுத்தப்பட வேண்டும் என ஷாங்காய் ஒத்துழைப்பு உச்சிமாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.
கிர்கிஸ்தான் நாட்டின் பிஷ்கேக் நகரில் நடைபெற்றும் வரும் ஷாங்காய் ஒத்துழைப்பு உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று உரையாற்றினார். அப்போது பேசிய அவர், பாதுகாப்பு தான் பிராந்தியத்தின் அமைதிக்கான பிரதானம் என்றார். பொருளாதாரத்திற்கான ஒத்துழைப்பை மேம்படுத்த இந்தியா உறுதி பூண்டிருப்பதாக கூறிய பிரதமர் நரேந்திர மோடி, ஷாங்காய் ஒத்துழைப்பு நாடுகளுக்கான விசா நடைமுறைகள் தளர்த்தப்படும் என தெரிவித்தார். இந்தநிலையில் பயங்கரவாதத்தை ஆதரிக்கும் நாடுகள் தனிமைபடுத்தப்பட வேண்டும் என்றும், பயங்கரவாத அமைப்புகளுக்கு பொருளாதார உதவிப்புரியும் நாடுகள் அதற்கான பதிலை சொல்லி ஆக வேண்டும் எனவும் மோடி வலியுறுத்தினார். ஒருங்கிணைந்த நடவடிக்கை மூலம் பயங்கரவாதத்தை ஒழித்துவிடலாம் என்றும் அவர் கூறினார். இதனிடையே முறைசாரா பேச்சுவார்த்தைக்கு இந்தியா விடுத்த அழைப்பை ஏற்றுக் கொண்ட சீன அதிபர் ஜி ஜிங்பிங்கிற்கு பிரதமர் நரேந்திர மோடி நன்றி தெரிவித்தார்.