7 நாட்கள் அரசு முறைப் பயணமாக அமெரிக்கா சென்றடைந்த பிரதமர் மோடிக்கு ஹூஸ்டன் நகரில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
கடந்த 21ம் தேதி டெல்லியில் இருந்து பிரதமர் மோடி அமெரிக்காவுக்கு புறப்பட்டார். அவரது விமானம், செல்லும் வழியில் அவசர தேவைக்காக, ஜெர்மனியின் பிராங்பர்ட் விமான நிலையத்தில் 2 மணி நேரம் நிறுத்தப்பட்டது.
பின்னர் அடுத்த கட்டமாக அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்திற்கு விமானம் புறப்பட்டுச் சென்றது. இந்தநிலையில், ஹூஸ்டன் நகர் விமானநிலையம் சென்றடைந்த பிரதமர் மோடிக்கு, சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.
ஹூஸ்டன் நகரில் உள்ள என்.ஆர்.ஜி. மைதானத்தில் இன்று நடைபெறும் ஹவுடி- மோடி என்ற நிகழ்ச்சியில் பிரதமர் பங்கேற்று உரையாற்றுகிறார். இந்நிகழ்ச்சியில், அமெரிக்க அதிபர் டிரம்ப், அமெரிக்க நாடாளுமன்ற செனட்டர்கள், முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்கின்றனர். இந்த நிகழ்ச்சியில், இந்திய வம்சாவளியை சேர்ந்த 50 ஆயிரம் பேர் கலந்து கொள்கின்றனர்.
ஹவுடி- மோடி என்ற நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ள பிரதமர் மோடியை வரவேற்கும் வகையில், சமூகவலைதளங்களில் பல்வேறு தரப்பினர் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
இன்று முதல் 27ம் தேதி வரை அமெரிக்காவில் தங்கியிருக்கும் மோடி, இரு நாடுகள் இடையேயான இருதரப்பு உறவுகளை மேம்படுத்தும் முயற்சியாக பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள உள்ளார்.