கொரோனா நோய்த்தடுப்பு நடவடிக்கை குறித்து மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை

கொரோனா நோய்த்தடுப்பு நடவடிக்கை குறித்து மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை நடத்துகிறார்.

நாடு முழுவதும் கொரோனா தொற்று மிக வேகமாக பரவி வருகிறது. நோய்த்தடுப்பு நடவடிக்கைகளில் மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த, தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநில அரசுகள், இரவு நேர ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகளை அமல்படுத்தியுள்ளன.

இந்த நிலையில், நோய்த்தடுப்பு நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்துவது குறித்து, மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி இன்று காலை 9 மணியளவில், ஆலோசனை நடத்துகிறார்.

இதனைத் தொடர்ந்து, நண்பகல் 12.30 மணியளவில், ஆக்சிஜன் உற்பத்தி நிறுவன பிரதிநிதிகளுடன் பிரதமர் காணொலியில் கலந்துரையாடுகிறார்.

ஆக்சிஜன் உற்பத்தித் திறனை அதிகரித்து, தட்டுப்பாட்டை போக்குவது குறித்து, இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக, பிரதமர் மோடியின், மேற்குவங்க தேர்தல் பிரசார சுற்றுப்பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதனிடையே, ஆக்சிஜன் பற்றாக்குறை மற்றும் தடுப்பூசி விநியோகம் குறித்து பிரதமர் மோடி தலைமையில் உயர்மட்ட அளவிலான ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது.

கூட்டத்தில், நாட்டில் ஏற்பட்டுள்ள ஆக்சிஜன் பற்றாக்குறை குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

அப்போது பேசிய பிரதமர், நாடு முழுவதும் ஆக்சிஜன் விநியோகத்திற்கு விரைவான போக்குவரத்து அவசியம் என தெரிவித்தார்.

மாநிலங்களுக்கு ஆக்சிஜன் விரைவாக கொண்டு செல்வதை உறுதி செய்ய வேண்டுமென்றும், நீண்ட தூர போக்குவரத்திற்கு ரயில் சேவையை பயன்படுத்த வேண்டுமென்றும் அறிவுறுத்தினார்.

நோயாளிகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் முன்கூட்டியே தட்டுப்பாட்டை அறிந்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் பிரதமர் மோடி கேட்டுக் கொண்டார்.

 

Exit mobile version