இந்தியா, ரஷ்யா இடையே உள்ள நல்லுறவு வளர்ச்சிப் பாதையில் பயணித்து வருவதாக பிரதமர் மோடியும், ரஷிய அதிபர் புதினும் பெருமிதம் தெரிவித்துள்ளனர்.
பிரேசில் தலைநகர் பிரேசிலியாவில் ‘பிரிக்ஸ்’ நாடுகளின் 11-ஆவது உச்சி மாநாடு நடைபெறுகிறது. மாநாட்டில் பிரதமர் மோடி மற்றும் ரஷ்ய அதிபர் புதின் இருவரும் சந்தித்து ஆலோசனை நடத்தினர். ஆலோசனையின் போது, இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அப்போது பேசிய ரஷ்ய அதிபர் புதின், ‘இந்தியா – ரஷ்யா இடையிலான இருதரப்பு வர்த்தகம் 17 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளதாகவும், இருதரப்பு ஒத்துழைப்புடன் மிகப் பெரிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் கூறினார்.
பின்னர் பேசிய பிரதமர் மோடி ‘இந்தியா – ரஷ்யா இடையிலான உறவு வளர்ந்து வருவதாகவும், இருநாடுகளிடையே அடிக்கடி நடைபெறும் பேச்சுவார்த்தைகளால் பரஸ்பர ஒத்துழைப்பு வலுவடைந்துள்ளதாகவும் கூறினார். ஆலோசனை முடிவில், ரஷ்யாவில் அடுத்த ஆண்டு மே மாதம் நடைபெறவிருக்கும் ‘வெற்றி தினம்’ கொண்டாட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்க வருமாறு, பிரதமர் மோடிக்கு அதிபர் புதின் அழைப்பு விடுத்தார்.
அதேபோல் பிரேசில் அதிபர் ஜெயிர் பொல்சொனாரோவையும், பிரதமர் மோடி சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து ஆலோசனை நடத்தினர். இதில் வர்த்தகம், முதலீடு, வேளாண்மை, உயிரி-எரிபொருள் உள்ளிட்ட துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை அதிகரிப்பது குறித்து இரு தலைவர்களும் விரிவாக ஆலோசனை நடத்தினர்..