தூரக் கிழக்கு நாடுகளின் வளர்ச்சிக்கு இந்தியா ஏழாயிரத்து இருநூறு கோடி ரூபாய் கடன் வழங்கும் எனப் பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்துள்ளார்.
ரஷ்யாவின் விளாடிவாஸ்டாக் நகரில் கிழக்கத்திய பொருளாதார அமைப்பு மாநாடு நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் கலந்துகொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி ஜப்பான் பிரதமர் சின்சோ அபே, மலேசியப் பிரதமர் மகாதிர் முகமது ஆகியோரைத் தனித்தனியாகச் சந்தித்துப் பேச்சு நடத்தினார். அதன்பின் மாநாட்டில் இந்தியா சார்பில் அமைக்கப்பட்டுள்ள அரங்கைப் பிரதமர் நரேந்திர மோடியும், அவருடன் சென்றுள்ள பிரதிநிதிகளும் பார்வையிட்டனர்.
மாநாட்டுக் கூட்டத்தில் பேசிய ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், இந்தியா, சீனா, கொரியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளுடன் ரஷ்யாவின் உறவு நேர்மையான பேச்சு மற்றும் மதிப்பின் அடிப்படையில் அமைந்தது எனத் தெரிவித்தார்.
மாநாட்டில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, கிழக்கத்திய பொருளாதார அமைப்பின் முயற்சிகள், தூரக்கிழக்கு நாடுகளின் நலனுக்கு மட்டுமல்லாமல் மனிதகுலத்தின் நலனுக்கானது எனத் தெரிவித்தார். விளாடிவாஸ்டாக்கில் தூதரகம் அமைத்த முதல் நாடு இந்தியா என்பதைக் குறிப்பிட்டார். சோவியத் ஒன்றியம் இருந்த காலத்திலும் பிற நாடுகளுக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட நிலையிலும் இந்தியாவுக்குக் கதவு திறந்திருந்ததாகவும் தெரிவித்தார். கிழக்கை நோக்கிய கொள்கையைத் தமது அரசு கொண்டிருப்பதாகவும், தூரக்கிழக்கு நாடுகளின் வளர்ச்சிக்கு இந்தியா ஏழாயிரத்து இருநூறு கோடி ரூபாய் கடனுதவி அளிக்கும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார்.