இன்று பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதும் மாணவ மாணவிகளுக்கு துணை முதல்வர் வாழ்த்து

தமிழகத்தில் இன்று தொடங்க உள்ள பிளஸ் 2 பொதுத் தேர்வினை, 8 லட்சத்து 35 ஆயிரம் மாணவ, மாணவிகள் எழுதகின்றனர்.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ் 2 பொதுத் தேர்வு இன்று தொடங்கி, மார்ச் 24 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. முதல் நாளான இன்று மொழிப்பாட தேர்வு நடைபெற உள்ளது. பிளஸ் 2 பொதுத் தேர்வினை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 7 ஆயிரத்து 276 பள்ளிகளை சேர்ந்த 8 லட்சத்து 16 ஆயிரத்து 359 மாணவ மாணவிகளும், 19 ஆயிரத்து 166 தனித்தேர்வர்களும் என, மொத்தம் 8 லட்சத்து 35 ஆயிரத்து 525 மாணவர்கள் தேர்வு எழுத உள்ளனர். இதில், மாணவிகள், 4 லட்சத்து 41 ஆயிரத்து 612 பேரும், மாணவர்கள் 3 லட்சத்து 74 ஆயிரத்து 747 பேரும், திருநங்கைகள் இரண்டு பேரும், சிறைக் கைதிகள் 62 பேரும் தேர்வெழுதுகின்றனர். புதிய பாடத்திட்டத்தில் மொத்தம் 600 மதிப்பெண்களுக்கு மாணவ, மாணவிகள் தேர்வு எழுத உள்ளனர். 3 ஆயிரத்து 12 தேர்வு மையங்களில் தேர்வுகள் நடத்தப்பட உள்ளன. தேர்வுகள் காலை 10 மணிக்கு தொடங்கி, மதியம் 1.15 மணி வரை நடைபெற உள்ளது. சிறப்பு சலுகையாக மாற்றுத் திறன் தேர்வர்களுக்கு மட்டும் கூடுதலாக ஒரு மணி நேரம் வழங்கப்படுகிறது. தேர்வில் முறைகேடுகளை தடுக்க 4 ஆயிரம் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளதுடன், ஆசிரியர்கள், மாணவர்கள் செல்போன் உள்ளிட்ட மின்சாதனங்கள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, இன்று பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதும் மாணவ மாணவிகளுக்கு தனது இதயப்பூர்வமான வாழ்த்துக்களை தெரிவித்து கொள்ளவதாக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். மதுரை விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இவ்வாறு தெரிவித்தார்.

Exit mobile version