செப்டம்பர் 12-ம் தேதி நடந்து முடிந்த நீட் தேர்வை ரத்து செய்ய கோரி உச்சநீதிமன்றத்தில் ரிட் மனு

செப்டம்பர் 12ம் தேதி நடைபெற்ற நீட் தேர்வை ரத்து செய்ய கோரி உச்சநீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் இளநிலை மருத்துவப் படிப்புக்கான தேசிய தகுதி நுழைவுத் தேர்வு கடந்த 12ம் தேதி நடைபெற்றது.

இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில், பொறியியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் உள்ள நீட் தேர்வு மையத்தில், வினாத்தாளை புகைப்படம் எடுத்து வெளியாட்களுக்கு அனுப்பி, அவர்களிடமிருந்து பதில்களைப் பெற்று மாணவிக்கு உதவியது தெரியவந்தது.

இதையடுத்து, முறைகேட்டில் ஈடுபட்ட மாணவி, அவரது உறிவனர் சுனில் குமார் யாதவ், அறை கண்காணிப்பாளர் ராம் சிங், தேர்வு மைய நிர்வாக பிரிவின் பொறுப்பாளர் முகேஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இதே போன்று, மகாராஷ்டிராவைச் சேர்ந்த பயிற்சி நிறுவனம் ஒன்று, நீட் தேர்வில் ஒவ்வொரு மாணவரின் பெற்றோரிடமும் 50 லட்சம் ரூபாய் வாங்கிக் கொண்டு ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதியது அம்பலமானது.

இதுதொடர்பாக 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து சிபிஐ விசாரணை நடத்தி வரும் நிலையில், செப்டம்பர் 12ம் தேதி நடைபெற்ற நீட் தேர்வை ரத்து செய்ய கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தேர்வு எழுதிய மாணவர்கள் சார்பில் வழக்கறிஞர் மம்தா சர்மா தொடர்ந்த வழக்கில், ராஜஸ்தான், மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் நடைபெற்ற நீட் தேர்வு முறைகேடு குறித்தும் சிபிஐ வழக்கு பதிவு செய்து விசாரித்து வருவது குறித்தும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வரும் என தகவல் வெளியாகி உள்ளது.

Exit mobile version