பிளாஸ்டிக் பொருட்களால் பரிதாபமாக உயிரிழந்த மான் – செய்தி தொகுப்பு

தாய்லாந்து நாட்டின் தேசியப் பூங்காவில் இறந்து கிடந்த மானின் வயிற்றில் 7 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் உலகெங்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு…

தாய்லாந்தில் உள்ள குன் சதான் தேசிய பூங்காவில் கடந்த 25ஆம் தேதி ஒரு காட்டுமான் இறந்து கிடந்தது. 10 வயதான அந்தக் காட்டுமான் ஏன் இறந்தது? – என்று அறிய உடற்கூறு ஆய்வுகளை மேற்கொண்டபோது, அதன் வயிற்றில் இருந்து 7 கிலோ பிளாஸ்டிக் குப்பைகள் வெளியே எடுக்கப்பட்டன. அதில், பிளாஸ்டிக்கினால் ஆன பைகள், கயிறுகள் மற்றும் ரப்பர் கையுறைகள் உள்ளிட்டவை இருந்தன. இதனால், மான் உணவு என நினைத்து உண்ட இந்த பிளாஸ்டிக் குப்பைகள் அதன் உணவுக் குழாயில் அடைத்துக் கொண்டதாலேயே மான் இறந்தது என்பது உறுதியானது. மான் வயிற்றில் 7 கிலோ பிளாஸ்டிக் காணப்பட்ட இந்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் தற்போது மிக வேகமாகப் பரவி வருகின்றது. தாய்லாந்தில் கடந்த ஆண்டில் மரியம் என்ற கடல்பசுக் குட்டி ஒன்று பிளாஸ்டிக்கை உண்டதால் இறந்தது, அதே போல பைலட் திமிங்கலம் ஒன்றும் 80 பிளாஸ்டிக் பைகளைத் தின்றதால் இறந்தது. இப்போது அதே பிளாஸ்டிக்கால் மான் இறந்துள்ளது. இந்த தொடர் உயிரிழப்புகள் தாய்லாந்து அரசுக்கு கடும் தலைவலியை ஏற்படுத்தியது. இன்றைக்கு உலகின் பல நாடுகளும் பிளாஸ்டிக் உபயோகத்திற்கு தடைகளையும் கட்டுப்பாடுகளையும் விதித்துள்ள நிலையில் தாய்லாந்தில் இதுவரை பிளாஸ்டிக்கிற்கு எந்தக் கட்டுப்பாடும் விதிக்கப்படவில்லை. இதனால் ஒவ்வொரு ஆண்டும் 7ஆயிரத்து 500 கோடி கிலோ எடையுள்ள பிளாஸ்டிக் பைகளை தாய்லாந்து மக்கள் பயன்படுத்தி வீசி எறிகின்றனர். இவை தாய்லாந்தின் சுற்றுச்சூழலைப் பெரிதும் பாதித்து வருகின்றன. இதனால், வரும் 2020ஆம் ஆண்டில் இருந்து ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக் பைகளுக்கு தடை விதிக்கும் முடிவை தாய்லாந்து அரசு எடுத்திருக்கிறது.

Exit mobile version