கோவை அரசு மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள பிளாஸ்மா வங்கியை அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, விஜயபாஸ்கர் ஆகியோர் திறந்து வைத்தனர். கோவை அரசு மருத்துவமனையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சை அளிக்க தனிப்பிரிவுகள் தொடங்கப்பட்டு சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது பிளாஸ்மா தானம் பெறும் வகையில் 25 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பிளாஸ்மா வங்கி தொடங்கப்பட்டுள்ளது. பிளாஸ்மா வங்கியை உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோர் திறந்து வைத்தனர். மருத்துவமனையில் 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் உருவாக்கப்பட்டுள்ள விபத்து சிறப்பு பிரிவையும் அமைச்சர்கள் திறந்து வைத்தனர்.
அதனைத் தொடர்ந்து கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி, விஜயபாஸ்கர், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டு கொரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆலோசனை நடத்தினர். மாவட்ட ஆட்சியர் ராசாமணி, மாநகராட்சி ஆணையாளர் சரவணகுமார் ஜடாவத், மாநகர காவல் ஆணையாளர் சுமித் சரண் உள்ளிட்டோரிடம் அமைச்சர்கள் ஆலோசனை நடத்தினர்.