சென்னையில் பிளாஸ்மா வங்கி திறக்கப்பட்ட நிலையில், தமிழகத்தில் மேலும் 7 இடங்களில் பிளாஸ்மா வங்கி தொடங்கப்பட உள்ளது. அத்துடன் கொரோனா சிகிச்சைக்காக கூடுதலாக 500 ஆம்புலன்ஸ்களும் வாங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 24 கொரோனா நோயாளிகள் பிளாஸ்மா சிகிச்சை மூலம் விரைவாக குணமடைந்த நிலையில், சென்னை ராஜீவ் காந்தி அரசு பொதுமருத்துவமனையில், 2 கோடியே 34 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பிளாஸ்மா வங்கி அமைக்கப்பட்டது. டெல்லிக்கு அடுத்தபடியாக இந்தியாவிலேயே இரண்டாவதாக தொடங்கப்பட்டுள்ள இந்த வங்கியை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார். பிளாஸ்மா வங்கியில், பரமகுடி தொகுதி அதிமுக எம்.எல்.ஏ சதன் பிரபாகர் முதல் நபராக பிளாஸ்மா தானம் அளித்தார். இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், ஒரே சமயத்தில் 7 பேர் வரை பிளாஸ்மா தானம் செய்யலாம் என்று கூறினார். மைனஸ் 40 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் ஓராண்டு வரை பிளாஸ்மாவை பாதுகாக்கலாம் என்றும் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார். தமிழகத்தில் மேலும் 7 இடங்களில் பிளாஸ்மா வங்கி அமைக்கப்பட உள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.
பின்னர் பேசிய சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், சென்னையில் பதிவாகாத மரணங்கள் பற்றி ஆராய மருத்துவர் வடிவேலன் தலைமையில் அமைக்கப்பட்ட குழு அரசிடம் அறிக்கை வழங்கியதாக தெரிவித்தார். இதன் படி 444 மரணங்கள் கொரோனா காரணமான ஏற்பட்ட இறப்பு அல்ல என்ற கருத்து இருந்த போதிலும், மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் படி, அவை கொரோனா மரணங்களாக சேர்க்கப்படும் என்று கூறினார்.