கூவத்தை சீரமைக்கும் திட்டம்: ஒரு பார்வை

ஒரு காலத்தில் சென்னையின் நீராதாரமாகவும், நீர்வழிப் போக்குவரத்துப் பாதையாகவும் இருந்த கூவம் ஆறு தற்போது சென்னையின் கழிவுநீர் அமைப்பாக மட்டுமே பார்க்கப்படும் அவலநிலை உள்ளது. இந்த நிலையை மாற்றி கூவம் நீரைக் குடிநீராக்க செயல்படுத்தப்பட்டுவரும் திட்டம் குறித்து இந்த சிறப்பு செய்தித் தொகுப்பில் விரிவாகப் பார்ப்போம்.

அடையாறு, கொசஸ்தலையாறு ஆகியவற்றோடு சென்னையில் பாயும் ஒரு முக்கிய நதிதான் கூவம். கடந்த நூற்றாண்டு வரையில் கூவத்தில் படகுப் போக்குவரத்து இருந்துள்ளது. இந்துக்களின் புனித நதிகளில் ஒன்றாகக் கருதப்பட்ட கூவத்தின் மீது ‘திருக்கூவப் புராணம்’ – என்ற நூலும் இயற்றபட்டது. அபோதெல்லாம் கூவத்தில் குளித்து, கூவத்து நீரைக் குடித்து சென்னை மக்கள் வாழ்ந்துள்ளனர்.

பின்வந்த காலங்களில் சென்னையில் ஏற்பட்ட மக்கள் தொகைப் பெருக்கமும், கழிவு மேலாண்மையில் மக்கள் கவனம் செலுத்தாததும், சட்ட விரோத ஆக்கிரமிப்புகளும் ஒன்றாகச் சேர்ந்து கூவத்தை இப்போது ஒரு சாக்கடையாக மாற்றி விட்டன – இந்த நிலையை மாற்றவே ‘கூவம் மறுசீரமைப்புத் திட்டம்’ கடந்த 2012ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. சிஆர்ஆர்டி – எனப்படும் ’சென்னை ஆறுகள் மறுசீரமைப்பு நிறுவனம்’ இதனை உருவாக்கியது. ‘தூய்மையான கூவம் துப்புரவான சென்னை’ – என்பதே இந்தத் திட்டத்தின் அடிநாதம்.

பல்வேறு படிநிலைகளைக் கொண்ட இந்தத் திட்டத்தைப் புரிந்து கொள்ள வேண்டுமென்றால் கூவத்தைப் பற்றி இன்னும் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.

திருவள்ளூர் மாவட்டத்தில் கூவம் என்ற பெயரிலேயே உள்ள ஒரு ஊரில் இருந்து பிறக்கும் கூவம் ஆறு சுமார் 70 கிலோ மீட்டர் தூரத்தைக் கடந்து சென்னையில் வங்கக் கடலில் கலக்கிறது. திருவள்ளூர், சென்னை, வேலூர் ஆகிய 3 மாவட்டங்களைச் சேர்ந்த 453 சதுர கிலோ மீட்டர் வடிநிலங்களைக் கூவம் ஆறு  பெற்று உள்ளது.

கூவத்தின் பாதையில் ஒரு மாநகராட்சி, 4 நகராட்சிகள், 3 டவுன் பஞ்சாயத்துகள், 2 பஞ்சாயத்து ஒன்றியங்கள், 148 கிராமங்கள் உள்ளன. இவை அனைத்தையும் கூவத்தின் மாசுபாடு பாதித்து வருகின்றது!. டெங்கு, மலேரியாவில் தொடங்கி காலரா, டயரியா வரையில் பல நோய்கள் கூவம் நீரால் உருவாகின்றன.

கூவம் ஆற்றை சூழலை மாசுபடுத்தும் ஒரு சாக்கடையாக அல்லாமல், சூழலை மேம்படுத்தும் ஒரு நன்னீர் ஆறாக மாற்றுவதுதான் ‘கூவ மறு சீரமைப்புத் திட்டம்’. 

இந்தத் திட்டத்தின் முதற் கட்டமாக கூவத்தில் கழிவுகள் நேரடியாகக் கலப்பது முதலில் முற்றிலுமாக ஒழிக்கப்பட உள்ளது. மாநகரம் மற்றும் நகர்ப் புறங்களில் இதற்காக புதிதாக 6 கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன. இவற்றால் சுத்திகரிக்கப்பட்ட நீர் மட்டுமே கூவத்தை சென்று அடையும். அடுத்து கூவத்தில் திடக் கழிவுகளையும், கட்டுமானக் கழிவுகளையும் கொட்டுவதும் முற்றிலுமாக தடை செய்யப்படுகிறது.

இரண்டாம் கட்டமாக மழை வெள்ளத்தின் போது, அதிக நீரை எடுத்துச் செல்லும்படி கூவம் தேவையான இடங்களில் தூர்வாரப்பட்டு அகலப்படுத்தப்பட உள்ளது. கழிமுகத்தில் கூவம் ஆற்றில் அடைத்துள்ள கடல் மண்ணும் அப்புறப்படுத்தப்பட உள்ளது. மேலும் கூவத்தில் 3 இடங்களில் ’பேபி கானல்’ எனப்படும் இணைக் கால்வாய்கள் வெட்டப்பட உள்ளன.

மூன்றாவது கட்டமாக கூவத்தின் கரைகள் மேம்படுத்தப்பட உள்ளன. கூவத்தின் கரைகளில் 9.6 கிலோ மீட்டருக்கு மொத்தம் 11 பராமரிப்புப் பாதைகளும், 24 கிலோ மீட்டர் நீளத்துக்கு மொத்தம் 22 நடை பாதைகளும், 19 கிலோ மீட்டருக்கு மொத்தம் 17 சைக்கிள் பாதைகளும், 6 லட்சத்து 63 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவுக்கு மொத்தம் 24 வாகன நிறுத்தங்களும் அமைக்கப்பட உள்ளன. சென்னையில் மோட்டார் வாகனங்களைத் தவிர்த்து பயணம் செய்ய விரும்புபவர்களுக்கு உதவும் வகையில் இந்த வசதி இருக்கும்.

இவற்றோடு நான்காவது கட்டமாக கூவம் ஆற்றின் இரு கரைகளிலும் 24.5 கிலோ மீட்டருக்கு மரங்கள் நடப்பட்டு, சுற்றுச் சூழலும் மேம்படுத்தப்பட உள்ளது.

இந்தத் திட்டத்தை செயல்படுத்து போது பல்வேறு அதிகாரச் சிக்கல்களை அரசு சந்திக்க வேண்டும், அத்தோடு இத்திட்டத்தால் பாதிக்கபடும் வாய்ப்புள்ள 14,257 குடும்பங்களுக்கு அரசு நட்ட ஈடோ மாற்று இடமோ அளிக்க வேண்டிய தேவையும் நேரலாம். இதையெல்லாம் கடந்தே இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட வேண்டும்.

சாத்தியங்கள் மற்றும் தடைகளை அடிப்படையாகக் கொண்டு, கூவ மறுசீரமைப்புத் திட்டமானது 3 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு உள்ளது. அவை சில மாதங்கள் முதல் 3 ஆண்டுகள் வரை தேவைப்படும் 60 குறுகிய காலத் திட்டங்கள், 4 ஆண்டுகள் முதல் 12 ஆண்டுகள் வரை தேவைப்படும் 7 மத்திய காலத் திட்டங்கள் மற்றும் 13 ஆண்டுகள் முதல் 25 ஆண்டுகள் வரை தேவைப்படும் 2 நெடுங்காலத் திட்டங்கள்.

இந்தத் திட்டங்கள் அனைத்தும் நிறைவேறும் போது கூவம் நீரை நம்மால் குடிக்க முடியும். இந்தத் திட்டத்தின் நிறைவேற்றத்திற்காக சென்னை ஆறுகள் மறுசீரமைப்பு நிறுவனத்துடன் தமிழக பொதுப்பணித்துறை, சென்னை மாநகராட்சி, தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், தமிழக குடிசைமாற்று வாரியம் – உள்ளிட்டவைகள் இணைந்து செயல்பட வேண்டிய தேவை உள்ளது. அரசின் இந்த மாபெரும் தேவைக்கு ஒத்துழைக்க வேண்டிய கடமை மக்களுக்கும் உள்ளது.

சென்னையின் வளர்ச்சிக்காக பலி கொடுக்கப்பட்ட கூவம் ஆறு மீண்டும் உயிர்த்து எழ நாம் உதவினால் மட்டுமே சென்னையின் எதிர்கால நீர்த்தேவை, சுகாதாரத் தேவை, வடிகால் தேவை, சூழலியல் தேவை – ஆகிய நான்கையும் நாம் ஈடு செய்ய முடியும்.

 
 
Exit mobile version