ஈரோட்டில் கடனை திருப்பி தராததால் கடன் வாங்கியவரை கொலை செய்து விட்டு விபத்து என நாடகமாடிய சம்பவம் அரங்கேறியுள்ளது.
சத்தியமங்கலம் அருகே உள்ள உயிலம்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் முருகன். இவர் கடந்த 6 ஆம் தேதி தனது இருச்சக்கர வாகனத்தில் புஞ்சை புளையம்பட்டியிலிருந்து உயிலம்பாளையத்தில் உள்ள தனது வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த டெம்போ மோதியதில் பரிதாபமாக உயிரிழந்தார். ஆனால், மருத்துவ பரிசோதனையில் தலையில் இரும்பு கம்பியால் அடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதனால் சந்தேகம் அடைந்த உறவினர்கள் புகார் அளித்தனர். இதுகுறித்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் விபத்தை ஏற்படுத்தியவர் மாதம்பாளையத்தை சேர்ந்த ஜீவாபாலன் எனபவர் தெரிய வந்தது.
தொடர்ந்து நடந்த விசாரணையில் ஜீவாபாலன் முருகனுக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு 10 ஆயிரம் ரூபாய் கடனாக வழங்கியதும், அந்த பணத்தை திருப்பி தராததால் திட்டமிட்டு கொலை செய்ததும் தெரிய வந்தது. இந்நிலையில், ஜீவாபாலன் மாதம்பாளையம் கிராம நிர்வாக அலுவலர் பழனிச்சாமி முன்பு ஆஜராகி, முருகனை திட்டமிட்டு கொலை செய்ததாக கூறி ஆஜரானார். அவர் ஜீவாபாலனை காவல்நிலையத்தில் ஒப்படைத்தார். குற்றத்தை ஒப்புக்கொண்டதையடுத்து ஜீவாபாலனை காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின்னர் சிறையிலடைத்தனர்.