பாலியல் வழக்குகளை விசாரிக்க நாடு முழுவதும், ஆயிரத்து 23 விரைவு நீதிமன்றங்கள் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
நாடு முழுவதும் ஒரு லட்சத்து 66 ஆயிரத்து 882 பாலியல் வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், இதனை விசாரிக்க மாவட்டம் தோறும் நீதிமன்றங்களை அமைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து 762 கோடி ரூபாய் செலவில் நாடு முழுவதும், ஆயிரத்து 23 விரைவு நீதிமன்றங்கள் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இதில், 389 நீதிமன்றங்கள் சிறார்கள் தொடர்பான பாலியல் வழக்குகளை மட்டும் விசாரிக்கும் என்றும், மீதமுள்ள 634 நீதிமன்றங்கள் அனைத்து பாலியல் வழக்குகளையும் விசாரிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஓராண்டுக்குள் அனைத்து வழக்குகளுக்கும் தீர்வு காணப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. காந்தி பிறந்தநாளான அக்டோபர் 2-ஆம் தேதி முதல் இந்த விரைவு நீதிமன்றங்கள் செயல்பட தொடங்கும் என்றும் தெரிகிறது.