அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பை வரவேற்கும் விதமாக குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் 22 கிலோ மீட்டர் தூரத்துக்கு பிரமாண்ட கலை நிகழ்ச்சிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
அமெரிக்க அதிபர் ட்ரம்ப், அவரது மனைவி மெலானியா ஆகியோர் 2 நாள் சுற்றுப்பயணமாக வருகிற 24ஆம் தேதி இந்தியா வருகின்றனர். அன்றைய தினம் குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையத்துக்கு வந்தடையும் ட்ரம்ப்பை, பிரதமர் மோடி வரவேற்கிறார். இதையடுத்து காந்தி ஆசிரமத்தை பார்வையிடும் ட்ரம்ப், உலகின் பெரிய கிரிக்கெட் மைதானமான மொடேரா மைதானத்தை திறந்து வைக்கிறார். ட்ரம்ப்பை வரவேற்கும் வகையில் பிரமாண்ட கலைநிகழ்ச்சிகள் நடத்த குஜராத் அரசு திட்டமிட்டுள்ளது. விமான நிலையத்தில் இருந்து காந்தி ஆசிரமம் வரை சுமார் 22 கிலோ மீட்டர் தூரத்துக்கு வழிநெடுகிலும் கலைநிகழ்ச்சிகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 3 கோடியே 86 லட்ச ரூபாய் மதிப்பில், பூந்தொட்டிகள் உட்பட பல்வேறு அலங்கார பொருட்களை சாலைகளின் இருபுறங்களிலும் வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதேபோல் பல்வேறு சாலைகளும் புதுப்பொலிவுடன் சீரமைக்கப்படுகின்றன. ஒட்டுமொத்தமாக இதற்கு 100 கோடி ரூபாய் செலவு செய்யப்படுவதாக குஜராத் அரசு தெரிவித்துள்ளது.