வரும் குளிர்காலத்தின்போது, காஷ்மீரின் பல்வேறு இடங்களில் மிகப் பெரிய தாக்குதல் நடத்துவதற்கு பயங்கரவாத அமைப்புகள் திட்டமிட்டுள்ளதாக, உளவு அமைப்புகள் எச்சரித்துள்ளன.
ஜம்மு – காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டு, ஜம்மு – காஷ்மீர், லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டன. இதற்கு பாகிஸ்தான் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்த அதிரடி நடவடிக்கையைத் தொடர்ந்து அங்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. பாதுகாப்புப் படையினரின் கண்காணிப்பும் தீவிரமடைந்ததால், இந்தியாவுக்குள் ஊடுருவ முடியாமல், பாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாதிகள் தடுக்கப்பட்டனர். இந்த நிலையில், குளிர்காலம் விரைவில் துவங்க உள்ளதால், காஷ்மீரின் பல்வேறு இடங்களில் தாக்குதல்கள் நடத்த, பாக்கிஸ்தானை சேர்ந்த லஷ்கர் – இ – தொய்பா, ஜெய்ஷ் – இ – முகமது உள்ளிட்ட பயங்கரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக உளவு அமைப்புகள் எச்சரித்துள்ளன. மேலும், இது மிகப் பெரிய தற்கொலைப் படை தாக்குதலாகவும் இருக்கலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.