வெள்ளப் பெருக்கு காரணமாக, சதுரகிரி மலைக்கோயிலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதால், சாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில், தரை மட்டத்திலிருந்து 4 ஆயிரத்து 500 அடி உயரத்தில் உள்ளது. அமாவாசை, பவுர்ணமி, பிரதோஷ நாட்களில் மட்டும் சதுரகிரி கோயிலுக்கு செல்ல பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.
இந்த நிலையில், நேற்று சனி மஹாபிரதோஷத்தை ஒட்டி, பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய சென்றனர். அப்போது திடீரென மழை பெய்து, மாங்கனி உடை, சங்கிலிப் பாறை, வழுக்குப் பாறை உள்ளிட்ட ஓடைகளில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது. இதனால் சாமி தரிசனம் செய்ய சென்ற பக்தர்கள் 50 பேர் திரும்ப முடியாமல் தவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்பு மற்றும் வனத்துறை அதிகாரிகள் 5 மணி நேரம் போராடி, பக்தர்களை பத்திரமாக மீட்டனர்.
தொடர்ந்து மழை பெய்ததால், பாதுகாப்பு கருதி, 200க்கும் மேற்பட்ட பக்தர்கள், சதுரகிரி கோயில் மலைப்பகுதியிலேயே பாதுகாப்பாக இரவு தங்க வைக்கப்பட்டனர். காட்டாற்று வெள்ளம் காரணமாக சதுரகிரி மலைக்கோயிலுக்கு பக்தர்கள் செல்ல 2 நாட்கள் தடை விதித்து, உதவி ஆட்சியர் தினேஷ் குமார் உத்தரவிட்டுள்ளார். இதனால் சதுரகிரி மலைக்கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.