சான்பிரான்ஸிஸ்கோ விமான நிலையத்தில், 5 வயது மதிக்கத்தக்க பன்றி ஒன்று, விமான நிலையத்திற்கு வரக்கூடிய பயணிகளை உற்சாகப்படுத்தி வருகிறது.
கலிப்போர்னியா மாகானத்தில் அமைந்துள்ளது சான்பிரான்ஸிகோ விமான நிலையம். இந்த விமான நிலையத்தில் தினமும் லட்சக்கணக்கானோர் வந்து செல்லுவது வழக்கம். இங்கு வரும் பயணிகளின் பயண நேர களைப்பை போக்கும் விதமாக, விமான நிலைய அதிகாரிகள், வேக் பிரிகேட் என்ற நிகழ்ச்சியை நடத்தி வருகின்றனர். வேக் பிரிகேட் என்பது மிருகங்கள் மூலம் மக்களை கவர்ந்து சிறிது நேரம் மகிழ்ச்சியாக வைத்திருக்கும் ஒரு நிகழ்ச்சி ஆகும்.
5 வயதான ஜூலியானா என்ற பன்றி, பயணிகளை உற்சாகப்படுத்தி வருகிறது. அதன் உரிமையாளரான டாட்டியானா டானிலோவா என்ற பெண், அந்த பன்றிக்கு விமானியின் தொப்பியை அணிவித்து, விரல்களில் நகச்சாயம் பூசி, விமான நிலையத்தில் பார்வையாளர்களை கவரும் வண்ணம் அலங்கரித்துள்ளார்.
வேலை நிமித்தமாக மற்றும் சுற்றுலா செல்லுவதற்காக விமான நிலையம் வரும் பயணிகளை வரவேற்கும் விதமாக, இந்த பன்றி அலங்கரிக்கப்பட்டு, பொதுமக்களுக்கு வித்தியாசமான அனுபவத்தை கொடுத்து வருகிறது. பயணிகள் பலரும் இந்த பன்றியுடன் செல்ஃபி எடுத்துக்கொள்வது, பன்றியுடன் விளையாடுவது, அதற்கு உணவு அளிப்பது என தங்களது நேரத்தை மகிழ்ச்சியாக செலவிடுவதாக கூறுகின்றனர். பயணிகளின் மன அழுத்தத்தை போக்க, சான்பிரான்ஸிகோ விமான நிலையம் எடுத்துள்ள இந்த முயற்சி, மக்களிடையே அதிக வரவேற்பை பெற்று வருவது கூறிப்பிடத்தக்கது.