போட்டோ ஷாப் பொன்னம்மா… செக் வைத்த முரட்டு சிங்கிள்…!

மேட்ரிமோனியல் தளங்கள் மூலம், திருமணம் ஆகாத ஆண்களுக்கு வலை விரித்து, நகை பணம் ஆகியவற்றை சுருட்டிச் சென்ற லக்ஸ் பேபி ஒருவரை மடக்கி பிடித்துள்ளார், முரட்டு சிங்கிள் ஒருவர். யார் அவர் பார்க்கலாம்.

ஊர் மக்கள் சுத்துப் போட ஒற்றை ஆளாக சிக்கி கொண்டு தவிக்கும் இந்த மஞ்ச காட்டு மைனாவின் பெயர் ஷோபிகா. புதுச்சேரி வாழ் புண்ணியவதி. பெண்ணுக்கு பெரியம்மா போன்ற தோற்றத்தில் உள்ள இவரை மணப்பெண் என்று நம்பி ஏமாந்து இன்று, இனோவா கார் டயரில் விழுந்து கிடக்கும் இந்த கல்யாணம் ஆகா காய்ந்த மரத்தின் பெயர் செல்லப்பாண்டி. திண்டுக்கல் வாழ் திருமதி செல்வம்.

32 வயதை கடந்தும் வரன் அமையாமல் வாழ்வில் பிடிப்பிழந்து சுற்றி திரிந்த செல்லப்பாண்டிக்கு சில மாதங்களுக்கு முன் மேட்ரிமோனியில் அறிமுகமானார் பவுடர் பதுமை ஷோபிகா. ஜெனிலியாவின் ஜெராக்ஸ் போல கள்ளம் கபடம் இல்லாமல் கொஞ்சி கொஞ்சி இவர் கடலை விதைக்க, அதில் மயங்கி போன செல்லப்பாண்டி, கெட்டி மேளம் கொட்ட ஓகே சொல்லியுள்ளார்.

இந்நிலையில் தனது தாய் தந்தையை சுனாமி சுருட்டி சென்று விட்டதாக கதை கட்டிய அந்த போட்டோஷாப் பொன்னம்மா, தான் ஒரு அனாதை என்று கண்ணீர் வடித்துள்ளார். இதனை நம்பி திண்டுக்கல் சாரதி, தன் செலவில் நிச்சய ஏற்பாடுகளை செய்ய, சுருக்கம் விழுந்த கண்ணம், வழுக்கைக்கு ஆயத்தாகும் தலை என மேட்ரிமோனியல் போட்டோவிற்கு சிறுது கூட match ஆகாமல் காட்சி தந்துள்ளார் ஷோபிகா.

முதுமை தாண்டவமாடும் முக தரிசனம் கண்ட பிறகாவது அந்த முரட்டு சிங்கிள் சுதாரித்திருக்க வேண்டும். ஆனால் கொளுத்தும் வெயிலுக்கு குடிசை கிடைத்தால் கூட போதும் என்ற மன நிலையில் இருந்த அவர், 25 ஆயிரம் ரூபாய் ரொக்கம், 2 சவரன் தங்க சங்கிலி கொடுத்து திருமணத்திற்கு நாள் குறித்துள்ளார்.

ஷோபிகா, செல்வபாண்டியை முதலும் கடைசியுமாக சந்தித்தது அன்றுதான். பணம், நகையோடு போனவரின் போன் ஸ்விச் ஆப் செய்யப்பட்டது. 5 மாதங்கள் அமுல் பேபி அப்ஸ்காண்ட். இதையடுத்து செல்வப்பாண்டி புதுச்சேரியில் உள்ள அவரது வீட்டிற்கு சென்று பார்த்துள்ளார். ஆனால் அங்கு அவர் இல்லை. பதிலாக வீடு காலி என அறிவிப்பு பலகை இருந்துள்ளது. விசாரித்தால் ஷோபிகாவின் மோசடி பெருவாழ்வு குறித்து கதா காலாட்சேபமே நடத்தி முடித்தனர் அண்டை வீட்டார்.

இதனையடுத்து சினம் கொண்ட சிங்கமான செல்லப்பாண்டி, பவுடர் குடோனை சிறை பிடிக்க திட்டம் தீட்டினார். அதன்படி ஷோபிகாவின் நண்பர்களை தொடர்பு கொண்டு திருமணத்திற்கு புடவை எடுக்க திண்டுக்கல் வருமாறு கூறியுள்ளார். 2 வது ரவுண்டுக்கு இழிச்சவாயன் ஏமாந்து அழைக்கிறான் என்று எண்ணிய ஷோபிகா, இனோவா காரில் எடுத்து கொண்டு திண்டுக்கல் விரைந்துள்ளார். இந்நிலையில் அவரை திட்ட மிட்டபடி வழி மறித்து சிறை பிடித்தார் செல்வபாண்டி எனும் சீனா தானா.

சாலையில் ஊர் ஒன்று கூடியது. சுதாரித்த ஷோபிகா, நான் செய்தது தவறுதான். பணம் நகையை திருப்பி கொடுத்து விடுகிறேன் என்று கூறி காரில் ஏறி தப்ப முயன்றார். இதையடுத்துஎனக்கு நியாயம் கிடைத்தால் மட்டும் போதாது என்னைப் போல ஏமாந்த எல்லோருக்கும் நியாயம் கிடைக்கும் வரை விடமாட்டேன் என தேவதையை கண்டேன் தனுஷாக மாறி, காரின் முன் படுத்து தர்ணாவில் ஈடு பட தொடங்கினார் செல்லப்பாண்டி.

தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார், கார் டயர் அருகில் சயண கோலத்தில் கிடந்த செல்லப்பாண்டிக்கு சமாதானம் கூறி அனுப்பி வைத்து மோசடி ராணியை போலீசார் கைது செய்தனர். தன்னை மோசடி செய்த பெண்ணை திட்டமிட்டு போலிசில் சிக்க வைத்த செல்லப் பாண்டியின் ராசதந்திரத்தை எண்ணி புல்லரித்து போ கிடக்கிறார்கள் திண்டுக்கல் மைந்தர்கள்.

Exit mobile version