இரண்டாம் கட்ட உள்ளாட்சி தேர்தல்: 3 மணி நிலவரப்படி 61.45 % வாக்குகள் பதிவு

158 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் 3 மணி நிலவரப்படி 61.45 % வாக்குகள் பதிவாகியுள்ளன.

தமிழகத்தில் 27 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு, இரண்டு கட்டமாக தேர்தல் நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி, கடந்த 27ஆம் தேதி முதல்கட்டமாக 156 ஊராட்சி ஒன்றியங்களுக்கு தேர்தல் நடைபெற்றது. முதல்கட்ட தேர்தலில் 76.19 சதவீத வாக்குகள் பதிவாகின. இந்த நிலையில், இரண்டாம் கட்டமாக 158 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 255 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், 2 ஆயிரத்து 544 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், 4  ஆயிரத்து 924 கிராம ஊராட்சி தலைவர்கள், 38 ஆயிரத்து 916 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கு வாக்குப்பதிவு தற்போது நடைபெற்று வருகிறது. இதற்காக 25 ஆயிரத்து 8 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இன்றைய தேர்தலில், ஒரு கோடியே 28 லட்சம் பேர் வாக்களிக்கின்றனர். காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணி வரை நடைபெறுகிறது. உள்ளாட்சித் தேர்தலில் இரண்டு கட்டமாக பதிவான வாக்குகள் ஜனவரி 2ஆம் தேதி எண்ணப்படுகின்றன.

இந்த நிலையில் இரண்டாம் கட்ட உள்ளாட்சி தேர்தலில் மாலை 3 மணி நிலவரப்படி 61.45 % வாக்குகள் பதிவாகியுள்ளன.

Exit mobile version