நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், 3-ம் கட்ட தளர்வுகளை மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் 31ம் தேதி ஊரடங்கு நிறைவடைய உள்ள நிலையில், மூன்றாம் கட்ட தளர்வுகளை மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. அதன்படி, ஆகஸ்ட் ஒன்று முதல் 3ம் கட்ட தளர்வுகள் அமலாகின்றன. கட்டுப்பாட்டு பகுதிகளில் ஆகஸ்ட் 31 வரை ஊரடங்கு தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரிகள், திரையரங்குகள், நீச்சல்குளங்கள், மதுக்கூடங்கள் போன்றவை திறக்கப்படாது என்றும், மெட்ரோ ரயில் சேவை, அரசியல் கட்சிகளின் கூட்டங்கள், மத நிகழ்ச்சிகள், விளையாட்டு மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகள் போன்றவற்றிற்கு தடை நீடிக்கும் என்றும் மத்திய உள்துறை அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.
நாடு முழுவதும் இரவு நேர ஊரடங்கு விலக்கிக் கொள்ளப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களுக்கு இடையேயான சரக்கு மற்றும் தனிநபர் போக்குவரத்து தடையில்லை என்றும், மாநிலங்கள், மாவட்டங்களுக்கு இடையே இ-பாஸ் இல்லாமல் பயணிக்கலாம் என்றும் மத்திய உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது.
ஆகஸ்ட் 5ம் தேதி முதல் யோகா பயிற்சி மற்றும் உடற்பயிற்சி கூடங்கள் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. வந்தே பாரத் திட்டத்தின் கீழ் சர்வதேச விமான பயணிகள் கட்டுப்பாடுகளுடன் அனுமதிக்கப்படலாம்.
முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியை பின்பற்றுவது மற்றும் தகுந்த சுகாதார நடவடிக்கைகளுடன் சுதந்திர தின விழா கொண்டாட்டங்களை கொண்டாட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்படும் நடைமுறைகளை மாநில அரசுள் தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் அத்தியாவசிய பணிகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.