பேட்ட விமர்சனம் – ரஜினி ரசிகர்களுக்கு ராஜபாட்டை

ரத்தம், சதை, புத்தி என முழுக்க முழுக்க ரஜினி ரசிகராக இருக்கும் ஒருவரால் தான் இப்படிப்பட்ட படத்தை எடுக்க முடியும் என்பதற்கு உதாரணமாக வந்திருக்கிறது பேட்ட. இதுவரை வெளிவந்து வெற்றிபெற்ற ரஜினி படங்களில் என்னென்ன வெற்றி அம்சங்கள் இருக்கிறதோ, அது அத்தனையும் ஒன்றுதிரட்டி ஒருபடமாக எடுத்துள்ளார் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ்.

துவக்கக் காட்சி துவங்கி, இறுதிவரை ஒவ்வொரு ப்ரேமிலும் ரஜினி, ரஜினி, ரஜினி… லிங்கா, கபாலி, காலா, 2.0 என தொடர் தோல்விப்படங்களாக அமைந்துவிட்டதால் கட்டாய வெற்றியை பதிவு செய்ய வேண்டிய நிலையில் ரஜினிக்கு கைகொடுத்துள்ளார் கார்த்திக் சுப்புராஜ் என்றே சொல்ல வேண்டும்.

கதையை நம்பி பலனில்லை, வழக்கமான மசாலாவைத் தான் ரசிகர்கள் தன்னிடம் எதிர்பார்க்கிறார்கள் என்பதை ரஜினியும் உணர்ந்துள்ளார் என்பது போல உள்ளது ஒட்டுமொத்த படமும். நொடிக்கு ஒரு ஸ்டைல், நிமிடத்திற்கு ஒரு பஞ்ச் டயலாக், தேவையான இடத்தில் பாடல்கள், சீரான இடைவெளியில் சண்டைக்காட்சிகள் என ரஜினிக்கான டெம்ப்ளேட் வடிவில் வந்துள்ளது பேட்ட.

ரஜினியும் தனக்கான இடத்தை தக்கவைத்துக் கொள்ள ரொம்பவே மெனக்கெட்டிருக்கிறார். அந்தவகையில் அவர் ரசிக்கவும் வைக்கிறார். எதிர்நாயகன் வலுவாக இருந்தால் மட்டும்தான் நாயகனின் சாகசங்கள் ரசிக்க வைக்கும். அந்தவகையில் நவாசுதீன் சித்திக், விஜய் சேதுபதி என இரண்டு எதிர்மறை பாத்திரங்கள் இருந்தும் அதற்குதக்க பலமான காட்சிகள் சற்று குறைவு என்றுதான் சொல்ல வேண்டும். ஆனாலும் கொஞ்சநேரமே வந்தாலும் நவாசுதீன் சித்திக்கும், விஜய் சேதுபதியும் தங்கள் நடிப்பால் மிரள வைக்கின்றனர்.

சசிகுமார், பாபி சிம்ஹா ஆகியோர் பாத்திரங்களில் வேறு யார் நடித்திருந்தாலும் வேறுபாடு இருந்திருக்காது. அப்படி வந்து போகிறார்கள் இருவரும். அதேபோன்று ஜோக்கர் – ஜிகிர்தண்டா படங்களில் கலக்கிய குரு சோமசுந்தரம், மலையாள படமான கம்மட்டிப்பாடத்தில் கலக்கிய மணிகண்டன் ஆச்சாரி ஆகிய இருவருக்கும் ஊறுகாய் பாத்திரங்கள் தான். கதாநாயகி இல்லாத கதாநாயகிகளாக வந்து செல்கின்றனர் சிம்ரன், மற்றும் த்ரிஷா.

டேராடூனின் ஒட்டுமொத்த அழகையும், உத்தரப்பிரதேசத்தின் குறுகலான வீதிகளையும் படத்திற்கு தக்க மூடையும் ஒளிஓவியமாக கொண்டு வந்துள்ளார் ஒளிப்பதிவாளர் திரு. முதல்பாதியில் விறுவிறுப்பான கதைக்களனை செதுக்கிய எடிட்டர் விவேக் ஹர்ஷன் பிற்பாதியில் சற்று தொய்வை தந்துள்ளார். அதனை ஈடுகட்டும் விதமாக க்ளைமேக்ஸ் காட்சியில் கலக்கியுள்ளார்.

ரஜினியை இத்தனை வயதில் இப்படி ஒரு ஆக்ஷன் படத்தில் நடிக்க வைத்த விதத்தில் இயக்குனருக்கும், அதனை சாத்தியப்படுத்தி விதத்தில் சண்டைப்பயிற்சி இயக்குனர் பீட்டர் ஹெயினுக்கும் ஒரு ஸ்பெஷல் சபாஷ் போடலாம்.

Exit mobile version