தமிழ்நாட்டில் 34 மாவட்டங்களில் பெட்ரோல் விலை சதமடித்தது. டீசல் விலையும் வரலாறு காணாத விதமாக உயர்ந்து வருவதால் வாகன ஓட்டிகள், வியாபாரிகள் கலக்கமடைந்துள்ளனர்.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்பட பெட்ரோல், டீசல் விலையை பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் நாள்தோறும் உயர்த்தி வருகின்றன.
இதன் விளைவாக பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது. தமிழ்நாட்டில், சென்னை, நெல்லை, திருச்சி தவிர எஞ்சிய 34 மாவட்டங்களில் பெட்ரோல் விலை சதமடித்தது.
சென்னையில் பெட்ரோல் விலை 99 ரூபாய் 49 காசுகளுக்கும், டீசல் விலை லிட்டர் 93 ரூபாய் 46 காசுகளுக்கும் விற்பனையாகிறது.
மதுரையில் பெட்ரோல் லிட்டருக்கு 34 காசுகள் அதிகரித்து 100 ரூபாய் 14 காசுகளுக்கும், டீசல் 23 காசுகள் அதிகரித்து 94 ரூபாய் 11 காசுகளுக்கும் விற்பனையாகிறது.
பெட்ரோல், டீசல் விலை உயர்வு பெரும் பீதியை ஏற்படுத்துவதாக மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
ஏற்கெனவே கொரோனாவால் வாழ்வாதாரத்தை இழந்துள்ள நிலையில், எரிபொருள் விலை மேலும் நிலைமையை மோசமாக்குவதாக வியாபாரிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
பெட்ரோல், டீசல் விலை உயர்வு காரணமாக, திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில், கட்டுமான பொருட்கள் ஏற்றிவரும் லாரிகள் வாடகை உயர்த்தப்பட்டுள்ளதாக, லாரி உரிமையாளர் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.
திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை நூறு ரூபாயை கடந்தது.
டீசல் விலையும் தொடர்ந்து அதிகரிப்பதால் ஆட்டோ, டேக்ஸி, டிராவல்ஸ் ஓட்டுநர்கள் கவலை அடைந்துள்ளனர்.
டீசல் விலை தொடர்ந்து உயர்வதால் அத்தியாவசிய பொருட்களின் விலைகளும் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் திமுக அரசு வாக்குறுதி அளித்தபடி, பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டுமென பொதுமக்கள், வணிகர்கள் வலியுறுத்தியுள்ளனர்.