பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி யின் கீழ் கொண்டு வருவதற்கான நேரம் இதுவல்ல என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில், 45-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டிக்குள் தற்போது கொண்டுவரப்போவதில்லை என்றார்.
பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டியின் கீழ் கொண்டு வருவது குறித்து கவுன்சில் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாகவும், இதற்கு பல மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்தாகவும் கூறினார். பெட்ரோல் டீசல் வரியை ஜி.எஸ்.டியின் கீழ் கொண்டுவருவதற்கான நேரம் இதுவல்ல என்று குறிப்பிட்ட அவர், கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது குறித்து, கேரள உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்படும் என்றார்.
கொரோனா சிகிச்சைகளுக்கு பயன்படும் மருந்துகள் மற்றும் உபகரணங்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டு வரும் ஜிஎஸ்டி வரிச் சலுகை, டிசம்பர் 31 வரை நீட்டிக்கப்படுவதாகவும் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். கருப்பு பூஞ்சை சிகிச்சை மருந்தான ஆம்போடெரிசின் உள்ளிட்ட மருந்துகளுக்கான வரிச்சலுகையும்நீட்டிக்கப்பட்டுள்ளது. ஸ்விக்கி, ஸொமாட்டோ உள்ளிட்ட ஆன்லைன் உணவு விநியோகம் செய்யும் நிறுவனங்களும், ஜி.எஸ்.டி வரம்பிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளன. இதனால், ஆன்லைனில் வாங்கப்படும் உணவுகளின் விலை உயருகிறது.