தேர்தல் வாக்குறுதியான பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வலியுறுத்தினால், மத்திய அரசை கை காட்டும் திமுக அரசின் செயல்பாடு, மக்களை ஏமாற்றும் செயல் என அண்ணா திமுக ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர்செல்வம் விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், 2014ஆம் ஆண்டில் இருந்த அளவிற்கு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரியை மத்திய அரசு குறைக்க வேண்டும் என்றும்,இதனால் தானாகவே மாநிலங்களின் வரி குறைத்துவிடும் என்றும் தமிழ்நாடு நிதியமைச்சர் கூறியிருப்பது தமிழ்நாட்டு மக்களுக்கு பெருத்த ஏமாற்றத்தை அளித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
2018-ல், கேரள மாநிலத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரி ஒரு ரூபாய் குறைக்கப்பட்டதைச் சுட்டிக்காட்டி தமிழ்நாடு அரசும் குறைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தவர் தற்போதைய முதலமைச்சர் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் சுட்டிக்காட்டியுள்ளார்.
பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு குறைத்ததை அடுத்து, 25 மாநிலங்களில் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரி குறைக்கப்பட்டுள்ள நிலையில்,தமிழ்நாட்டில் அதைச் செய்வதற்கான சாத்தியம் இல்லை என்று நிதியமைச்சர் அறிவித்திருப்பது வேதனைக்குரியது என்று தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் வரி விதிப்பு குறித்து தெரிந்து கொண்டு தானே, திமுகவின் தேர்தல் அறிக்கையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 5 ரூபாயும்,டீசல் விலை லிட்டருக்கு 4 ரூபாயும் குறைக்கப்படும் என்ற வாக்குறுதியில் ஏதாவது நிபந்தனை விதிக்கப்பட்டிருந்ததா? என கேள்வி எழுப்பியுள்ளார்.
வாக்குறுதியே அளிக்காத பல மாநிலங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரியை கணிசமாக குறைத்துள்ள நிலையில், திமுக அரசின் இந்த அறிவிப்பு, விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்து கொண்டே செல்லும் அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் காய்கறிகளின் விலை உயர்வால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் அமைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.