மத்திய அரசின் அவசர சட்டத்தை ரத்து செய்யக் கோரி உயர்நீதிமன்றத்தில் மனு!

கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு எதிராக கடன் வசூல் நடவடிக்கை தொடர்பான அவசர சட்டத்தை ரத்து செய்யக் கோரிய மனுவுக்கு மத்திய அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொரோனா ஊரடங்கு காலத்தில் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு எதிராக கடன் வசூல் மற்றும் திவால் நடவடிக்கை எடுப்பது தொடர்பாக எந்த வழக்கும் தாக்கல் செய்யக் கூடாது என மத்திய அரசு அவசர சட்டம் பிறப்பித்தது. மத்திய அரசின் இந்த அவசர சட்டத்தை ரத்து செய்யக் கோரி சென்னையை சேர்ந்த ககன் போத்ரா என்பவர் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார். மனு மீதான விசாரணை நீதிபதிகள் ஏ.பி.சாஹி மற்றும் செந்தில்குமார் ராமமூர்த்தி தலைமையில் நடைபெற்றது. அப்போது மத்திய அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் சங்கரநாராயணன், இது தற்காலிக சட்டம் என்றும், கொரோனா ஊரடங்கு முடிந்த பிறகு கார்ப்பரேட் நிறுவனங்கள் மீது வழக்கு தொடரலாம் என்றும் விளக்கம் அளித்தார். இந்த நிலையில், மனு தொடர்பாக 6 வாரத்திற்குள் பதிலளிக்க, மத்திய அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Exit mobile version