இடைத்தேர்தல்: அதிமுக சார்பில் விருப்ப மனு வினியோகம் இன்று தொடங்கியது

நாங்குநேரி, விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடுவோருக்கான விருப்பமனு வழங்கப்பட்டு வருகிறது.

நாங்குநேரி, விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிகளுக்கு அக்டோபர் 21 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்தத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புபவர்கள் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமையகத்தில் இன்றும், நாளையும் விருப்ப மனுக்கள் பெறலாம் என அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, காலை முதலே குவிந்த அதிமுக தொண்டர்கள் விருப்ப மனுக்களை ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர்.

நாங்குநேரி தொகுதியில் போட்டியிட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பி.எச்.மனோஜ் பாண்டியன், பிரபாகரன் உள்ளிட்டோரும் விருப்ப மனுக்களைப் பெற்றுள்ளனர். விக்கிரவாண்டி தொகுதியில் போட்டியிட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் லட்சுமணன், ஒன்றிய கழக செயலாளர் வேலு, காணை ஒன்றிய கழகச் செயலாளர் முத்தமிழ்செல்வன் மற்றும் பொதுக்குழு உறுப்பினர் பன்னீர், வழக்கறிஞர் தம்பிதுரை உள்ளிட்டோரும் விருப்ப மனுக்களை பெற்றுள்ளனர்.

இதனிடையே, இடைத்தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளிப்பவர்களிடம், நாளை நேர்காணல் நடத்தப்படும் என அதிமுக தலைமை அறிவித்துள்ளது. அன்று பிற்பகல் சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் நேர்காணல் நடைபெறும் என கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அறிவித்துள்ளனர்.

Exit mobile version