காது கேளாத, வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளிகள் உள்ளாட்சி தேர்தலில் நகர்புறங்களில் போட்டியிடலாம் என்று தமிழக அரசு சட்ட திருத்தம் செய்து அரசாணை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் நடைபெறும் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்பவர்கள் காது கேளாத, வாய் பேச முடியாத மாற்றுத் திறனாளியாக இருந்தால் அவர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று சட்டத்தில் இடம் பெற்றிருந்தது. இதைப்போன்று தொழு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் மனுக்களை நிராகரிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது.
இந்த சட்டத்தை திருத்தம் செய்ய தமிழக அரசு முடிவு செய்திருந்தது. அதன்படி, சென்னை மாநகராட்சி முனிசிபில் சட்டம் மற்றும் தமிழ்நாடு மாவட்ட முனிசிபல் சட்டம் ஆகியவற்றில் திருத்தம் செய்யப்பட்டு கடந்த சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில் அந்த சட்ட திருத்தை செயல்படுத்த தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதில், காது கேளாத, வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளிகள் உள்ளாட்சி தேர்தலில் நகர்புறங்களில் போட்டியிலாம் என்று குறிப்பிட்டுள்ளது.