சர்வதேச மற்றும் தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகளில் பங்கேற்கும் வீரர்கள், பயிற்சி பெற அனுமதி வழங்கி தமிழக அரசு அரசாணை வெளியீட்டுள்ளது.
இது குறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், உடற்பயிற்சி கூடங்கள் மற்றும் நீச்சல் பயிற்சிகளை தவிர்த்து மீதமுள்ள விளையாட்டு பயிற்சிகளுக்கு அனுமதி வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விளையாட்டு வீரர்கள், பயிற்சியாளர்கள், ஊழியர்கள் உள்ளிட்ட அனைவரும் அரசின் பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் எனவும், பயிற்சி மேற்கொள்ளும் உபகரணங்கள் மற்றும் அரங்குகளை ஒவ்வொரு முறையும் கிருமிநாசினிகள் கொண்டு சுத்தம் செய்ய வேண்டும் எனவும், அறிவுறுத்தப்பட்டுள்ளது. விளையாட்டு வீரர்கள் பயன்படுத்தும் உபகரணங்களை மற்றொருவர் பயன்படுத்தக்கூடாது எனவும், ஒவ்வொரு முறை பயிற்சிக்கு முன் வீரர்களின் உடல்நிலை குறித்து பயிற்சியாளர்கள் கேட்டறிய வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பயிற்சியாளர்கள் தனி உபகரணங்களை கொண்டே பயிற்சி அளிக்க வேண்டும் என்றும், வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் கட்டாயம் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் எனவும் வழிகாட்டு நெறிமுறையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.