ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டதை தொடர்ந்து காரைக்காலில் பேருந்துகளை இயக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.
கொரோனா பரவலை தடுக்க பிறப்பிக்கப்பட ஊரடங்கால் 50 நாட்களுக்கும் மேலாக முடங்கியிருந்த காரைக்கால் மாவட்டத்திற்கு தற்போது நான்காம் கட்ட ஊரடங்கில் ஒரு சில
தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மதுபான கடைகள் உணவகங்கள் தவிர மற்ற கடைகள் காலை 7 மணி முதல் மாலை 7 மணிவரை திறக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. இதனை அடுத்து பேருந்துகள் உள்
மாவட்டங்களுக்கு மட்டும் இயக்க புதுச்சேரி அரசு மற்றும் காரைக்கால் மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை 50 சதவீத
பயணிகளுடன் இயக்கப்படும் என்றும், காரைக்காலில் எல்லைப் பகுதிகளான பூவம், வாஞ்சூர், நெடுங்காடு உள்ளிட்ட பகுதிகளுக்கும் பேருந்துகள் இயக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பயணிகள் கட்டாயம் முகக் கவசம் அணியவும் அறிவுறுத்தப்பட்டுள்ள நிலையில், பேருந்துகள் அனைத்தும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு இயங்கி வருகிறது.