புதிய நாடாளுமன்ற கட்டடம் கட்டும் பணிக்கு, அனுமதி வழங்கி உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
டெல்லியில் சுமார் 64 ஆயிரத்து 500 சதுர மீட்டர் பரப்பளவில் 971 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய நாடாளுமன்ற கட்டடம் மற்றும் வளாகங்களை அமைக்கும் பணியை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது. புதிய கட்டுமானப் பணிகளுக்கு பல்வேறு சுற்றுச்சூழல் அனுமதிகள் பெறவில்லை எனக் கூறி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. கடந்த மாதம் இந்த வழக்கு விசாரணையின் போது, டிசம்பர் 10ஆம் தேதி பூமி பூஜை நடத்தலாம் என்று கூறிய உச்சநீதிமன்றம், கட்டுமானப் பணிகளுக்கு தடை விதித்தது. இந்த வழக்கில் நீதிபதி கன்வில்கர் தலைமையிலான அமர்வு தீர்ப்பு வழங்கியது. அப்போது, புதிய நாடாளுமன்ற கட்டடம் கட்டும் பணிக்கு, அனுமதி வழங்கி தீர்ப்பளித்தனர். புராதன சின்னங்களை நிர்வகிக்கும் பாரம்பரிய கட்டடக் குழுவின் ஒப்புதலை பெற்று புதிய நாடாளுமன்றத்திற்கு கட்டுமானப் பணிகளை மேற்கொள்ளலாம் என நீதிபதிகள் தீர்ப்பளித்தனர். நீதிபதிகள் கன்வில்கர் மற்றும் மகேஷ்வரி ஆகியோர் புதிய நாடாளுமன்ற கட்டடம் கட்டும் பணிக்கு அனுமதி வழங்கி தீர்ப்பளித்தனர். மூன்றாவது நீதிபதியான சஞ்சீவ்கண்ணா, மாறுபட்ட தீர்ப்பளித்தார்.