பேரறிஞர் அண்ணாவின் 111வது பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இந்நாளில் அண்ணாவை நினைவு கூறும் ஒரு சிறு வரலாறு.
காஞ்சிபுரத்தில் நடராஜன் மற்றும் பங்காரு அம்மாளுக்கு மகனாக 1909ல் செப்டம்பர் 15ம் தேதி பிறந்தார் அண்ணாதுரை. தனது பள்ளிப் படிப்பை சென்னையில் உள்ள பச்சையப்பா உயர்நிலைப் பள்ளியில் தொடங்கினார். பிறகு பட்டப்படிப்பை பச்சையப்பா கல்லூரியில் முடித்தார். தனது 21வது வயதில் ராணி என்பவரை திருமணம் முடித்தார் அண்ணா.
கல்லூரி வாழ்க்கைக்கு பிறகு தொடங்கிய ஆசிரியர் பணியை குறுகிய காலத்திலேயே விட்டுவிட்டு, பத்திரிக்கை மற்றும் அரசியலில் தீவிர ஆர்வம் செலுத்தி, தனது பயணத்தை தொடங்கினார். பெரியாரின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்ட அண்ணா, நீதிக் கட்சியில் சேர்ந்து அரசியல் பணியாற்றினார்.
தமிழகத்தில் பல கட்டங்களாக நடைபெற்ற இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் பங்கேற்று, தனது தீரமிக்க பேச்சாற்றலால் மக்களின் பேராதரவை பெற்றார். 1962லிருந்து 1967 வரை மாநிலங்கவை உறுப்பினராக பதவி வகித்தார். தனது ஆட்சி காலத்தில் மதராஸ் மாநிலம் என்றிருந்த சென்னை மாகாணத்தை தமிழ்நாடு என்று பெயர் மாற்றி தமிழக வரலாற்றில் நீங்கா இடம் பெற்றார். “இரண்டாம் உலகத் தமிழ் மாநாடு” நடத்தி தமிழுக்கு மேலும் பெருமை சேர்ந்தார்.
தமிழில் சிலேடையாக, அடுக்கு மொழிகளுடன், அனைவரையும் கவரும் வகையில் பேசும் திறன் பெற்ற அண்ணா, பல முற்போக்கு, சீர்திருத்த நாடகங்களையும் எழுதி இயக்கி உள்ளார். தமிழ் திரைப்படங்களுக்கு கதை, வசனம் எழுதி, அதில், தனது திராவிட சீர்திருத்தக் கருத்துக்களை பரப்பினார். அண்ணா எழுதிய வேலைக்காரி மற்றும் ஒர் இரவு போன்ற நாவல்கள் திரைப்படங்களாகவும் எடுக்கப்பட்டன.
“கடமை-கண்ணியம்-கட்டுப்பாடு” என்ற அண்ணாவின் முழக்கம் புகழ் பெற்ற ஒன்று. “எதையும் தாங்கும், இதயம் வேண்டும், மறப்போம் மன்னிப்போம், கத்தியை தீட்டாதே புத்தியைத் தீட்டு, எங்கிருந்தாலும் வாழ்க, ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம், சட்டம் ஒரு இருட்டறை அதில் வக்கீலின் வாதம் ஒளி விளக்கு, மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு, மக்கள் தொண்டே மகேசன் தொண்டு”, இதுபோன்ற பிரபலமான வசனங்களும் அண்ணாவின் எழுத்தாற்றலுக்கும், பேச்சாற்றலுக்கும் மிக சிறந்த எடுத்துகாட்டுகளாகும்.
தனது இறுதி அஞ்சலியில் திரண்ட பிரமாண்ட மக்கள் கூட்டத்தால், வாழும்போதும் சரித்திர நாயனாக வாழ்ந்து, இறப்பிலும் ஒரு உலக சாதனையை படைத்தார்.