பொங்கல் விடுமுறையையொட்டி நேற்று வரை சென்னையில் இருந்து 2 லட்சத்து 81 ஆயிரம் பேர் வெளியூர் சென்றுள்ளனர்.
பொங்கல் பண்டிகையையொட்டி தொடர்ந்து விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால், சென்னையில் இருந்து மக்கள் பலர் தங்களது சொந்த ஊருக்கு படையெடுத்து வருகின்றனர். அவர்களுக்கு ஏதுவாக பல சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதோடு, சில தினங்களுக்கு முன்பு போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் சென்னையில் அமைக்கப்பட்டுள்ள 17 முன்பதிவு மையங்களையும் திறந்து வைத்தார். இந்த நிலையில் நேற்று வரை ஒரு லட்சத்து 75 ஆயிரத்து 456 பயணிகள் பயணம் மேற்கொள்ள முன்பதிவு செய்துள்ளதாகவும், 5 ஆயிரத்து 378 பேருந்துகளில் சென்னையில் இருந்து 2 லட்சத்து 81 ஆயிரத்து 975 பேர் வெளியூர் சென்றுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. அதன் மூலம் 9 கோடியே 12 லட்ச ரூபாய் வருவாய் கிடைத்துள்ளதாகவும் போக்குவரத்துக் கழகம் தகவல் தெரிவித்துள்ளது.