நிலவில் தரையிரங்கிய சந்திராயன்-2 விண்கலத்தின் விக்ரம் லேண்டரை கண்டறியும் பணியில் இஸ்ரோ விஞ்ஞானிகள் வெற்றி பெற வேண்டும் என திங்களூர் சந்திரன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
தஞ்சை மாவட்டம் திருவையாறு அருகில் உள்ள திங்களூர் கிராமத்தில் அமைந்துள்ளது கைலாசநாதர் திருக்கோயில். நவக்கிரக ஸ்தலங்களில் ஒன்றான இக்கோயில் சந்திரனுக்கு உரிய பரிகார ஸ்தலமாகவும் விளங்கி வருகிறது. இக்கோயிலில், தனி சன்னதியில் அமைந்துள்ள சந்திர பகவானுக்கு தினசரி பூஜைகளும் திங்கள் கிழமை மற்றும் பௌர்ணமி நாட்களில் சிறப்பு பூஜைகளும் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் சந்திராயன்-2 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்கும்போது, நிலவின் மேற்பரப்பிலிருந்து 2.1 கிலோ மீட்டர் தொலைவில் விண்கலத்திற்கும் லேண்டருக்குமான தொலைத்தொடர்பு துண்டானது. இதனால் நிலவில் தரையிறக்கிய விக்ரம் லேண்டரை கண்டறியும் பணியில் இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.
விஞ்ஞானிகளின் தேடுதல் வெற்றிபெற வேண்டும் என தஞ்சை மாவட்டம் திங்களூரில் அமைந்துள்ள சந்திரன் சந்நிதியில் சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடத்தப்பட்டது.
இந்த சிறப்பு பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு இஸ்ரோ விஞ்ஞானிகளின் பணி வெற்றி அடைய வேண்டும் என பிரார்த்தனை செய்தனர்.