தமிழ்நாட்டில் நாளை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ள நிலையில், சொந்த ஊருக்கு திரும்ப பேருந்து நிலையங்களிலும், ரயில் நிலையங்களிலும் பொதுமக்கள் பல மணி நேரம் காத்துக்கிடந்தனர்.
முழு ஊரடங்கு எதிரொலியாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வசிக்கும் மக்கள் சொந்த ஊருக்கு திரும்பி வருகின்றனர். இதனால், சென்னை புறநகர் பகுதியான பெருங்களத்தூர் பேருந்து நிலையத்தில் பயணிகளின் கூட்டம் அலைமோதியது. தனியார் பேருந்துகளிலும், பல மடங்கு கட்டணம் வசூலிக்கப்படுவதால் சொந்த ஊர் திரும்பவே போராடும் நிலை ஏற்பட்டுள்ளது.
கோவை சிங்காநல்லூர் பேருந்து நிலையத்திலிருந்து மதுரை, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகளில் பயணிகள் கூட்டம் அலைமோதியது. ஒரே நேரத்தில் பொதுமக்கள் திரண்டதன் காரணமாக சிங்காநல்லூர் பேருந்து நிலைய பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
கோவையில் ஆயிரக்கணக்கான வடமாநில தொழிலாளர்கள் பணியாற்றி வரும் நிலையில், முழு ஊரடங்கை அடுத்து அவர்கள் சொந்த ஊர் திரும்ப முனைப்பு காட்டி வருகின்றனர். இதனால் கோவை ரயில் நிலையத்தில் வெளி மாநில தொழிலாளர்களின் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.