ஆந்திராவில் ஆதார் அட்டையுடன் வெங்காயம் வாங்க காத்திருந்த மக்கள்

ஆந்திர மாநிலம் திருப்பதியில், மானிய விலையில் வெங்காயம் வாங்க, மூன்று கிலோ மீட்டர் தூரத்திற்கு மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

நாடு முழுவதும் வெங்காயம் விலை உச்சம் தொட்டுள்ளது. வெங்காயம் விலை உயர்வால் இல்லத்தரசிகள் கண்ணீர் வடிக்கும் சூழல் நிலவும் நிலையில், விலை உயர்வை கட்டுப்படுத்த மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. இந்த நிலையில், திருப்பதி உழவர் சந்தையில், மானிய விலையில் வெங்காயத்தை ஆந்திர அரசு விற்று வருகிறது. வெங்காயம், கிலோ ஒன்றுக்கு 25 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. இன்று வார விடுமுறை என்பதால், திருப்பதி உழவர் சந்தையில் வெங்காயம் வாங்க, மக்கள் கூட்டம் அலைமோதியது. வெங்காயம் வாங்க, சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் வரை மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். முன்னதாக ஆதார் அட்டை உள்ளவர்களுக்கே வெங்காயம் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, ஆதார் அட்டையுடன் வெங்காயம் வாங்க மக்கள் வந்திருந்தனர். பின்னர், வெங்காயம் வாங்க ஆதார் அட்டை தேவை இல்லை என்று உழவர் சந்தை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Exit mobile version