கொரோனா பரவல், குடிசை பகுதிகளை காட்டிலும், அடுக்குமாடி குடியிருப்புகளில் தான் அதிகம் பரவி வருவதாக, சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில், கொரோனா வார்ட்டில் கூடுதலாக ஏற்படுத்தப்பட்டுள்ள படுக்கை வசதிகளை, அவர் ஆய்வு செய்தார்.பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களில் மட்டுமே 2 சதவீதத்துக்கு மேல் கொரோனா பாதிப்பு ஏற்படுவதாக தெரிவித்தார். சென்னையில் கொரோனா சிகிச்சை வழங்க பல்வேறு அரசு மருத்துவமனைகள் இருக்கும் நிலையில், மக்கள் குறிப்பிட்ட சில மருத்துவமனைகளை மட்டும் நாட வேண்டாம் என அவர் கேட்டுக் கொண்டார். தற்போது 58 சதவீத கொரோனா பாதிப்பு, 18 முதல் 45 வயதுக்குட்பட்டோருக்கு ஏற்படுவதாகவும், 90 சதவீத உயிரிழப்பு 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஏற்படுவதாகவும் தெரிவித்தார். பெரும்பாலும் இளைஞர்கள் மூலமே முதியவர்கள் கொரோனா தொற்றுக்கு உள்ளாவதாக தெரிவித்த அவர், இதை தடுக்கும் நோக்கில் இளம் தலைமுறையினர் கவனமுடன் நடந்துக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
தொடர்ந்து பேசிய அவர், அபராதம் வசூலிக்கப்படுவதால், முகக் கவசம் அணிபவர்களின் எண்ணிக்கை கூடியுள்ளதாகவும் தெரிவித்தார். பொது போக்குவரத்தை உபயோகிக்கும் மக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என அவர் அறிவுறுத்தினார்.