விருதுநகர் மாவட்டத்தில் முறையான அறிவிப்பு இல்லாததால் கொரோனா நிவாரண தொகுப்பு பெற நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்த மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
கொரோனா முழு ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், அரிசி குடும்ப அட்டை தாரர்களுக்கு நிவாரண தொகை மற்றும் 13 வகை நிவாரண பொருட்கள் வழங்கப்படுவதாக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், விருதுநகர் மாவட்டத்தில் இதுவரை நிவாரண தொகுப்பு வழங்கவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். மாவட்ட நிர்வாகம் முறையான அறிவிப்பு வழங்காததால் தினமும் நியாய விலைக்கடை முன்பு காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக கவலை தெரிவித்துள்ளனர். கொரோனா காலத்தில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களை அதிகாரிகள் அலைக்கழிப்பது வேதனை அளிப்பதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.