தமிழ்நாட்டில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்துள்ளதால், தேர்தலுக்கு பிறகு தேவைக்கு ஏற்ப, படிப்படியாக கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டி.எம்.எஸ். வளாகத்தில் அவர் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ராதாகிருஷ்ணன், வாக்குச்சாவடிகளில் சுகாதாரத்துறை சார்பாக செய்யப்பட்டுள்ள கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தெரிவித்தார். வாக்காளர்கள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிந்து வாக்குச்சாவடிக்கு வர வேண்டும் என்றார். கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில், கட்டுப்பாட்டு பகுதிகளில் வீடு வீடாக சென்று காய்ச்சல் பரிசோதனை செய்யும் பணி, 7ம் தேதி முதல் முழுவீச்சில் நடைபெறும் என ராதாகிருஷ்ணன் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், தேர்தலுக்கு பிறகு முழு ஊரடங்கு என்ற வதந்தியை மக்கள் நம்ப வேண்டாம் என்றார். கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால், தேவைக்கு ஏற்ப, பொதுமக்களுக்கு பாதிப்பின்றி படிப்படியாக கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என்றும் அவர் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், பொதுமக்களில் சிலர் தடுப்பூசியை அலட்சியப்படுத்துவது வருத்தம் தருவதாக கூறினார். தமிழ்நாட்டில் 32 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப் பட்டுள்ளதாகவும், யாருக்கும் இதுவரை பக்க விளைவுகள் ஏற்படவில்லை என்பதையும் சுட்டிக்காட்டினார். காய்ச்சல் அறிகுறி இருந்தால், தாமதிக்காமல் உடனடியாக பரிசோதனை செய்து கொள்ளுமாறு பொதுமக்களை அவர் கேட்டுக்கொண்டார்.