கொரோனா தொற்றின் தாக்கம் குறைய குறைய அரசு அதிகப்படியான தளர்வுகளை அளித்து வருவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சேலம் மாவட்டம் அஸ்தம்பட்டியில், முதலமைச்சர் தலைமையில் அனைத்து துறை அரசு அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பேசிய முதலமைச்சர், ஏற்கனவே இரண்டு முறை ஆலோசனைக் கூட்டம் நடத்தி அதன் மூலம் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளால் சேலத்தில் தற்போது கொரோனா தொற்று படிப்படியாக குறையத் துவங்கியுள்ளதாகத் தெரிவித்தார். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் வசதிக்கு ஏற்ப படுக்கை வசதிகள் அதிகப்படுத்தப்பட்டுள்ளதாகவும், ஊரடங்கில் மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி கிடைப்பதாகவும் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், தொழிற்சாலைப்பணிகள், வேளாண் பணிகள், 100 நாள் வேலை பணிகள் தடையின்றி நடைபெற்று வருவதாக கூறினார். பொதுமக்கள் ஒத்துழைத்தால் தொற்றின் தாக்கம் குறையும் என்பதால், அரசின் விதிமுறைகளை மக்கள் முறையாக பின்பற்ற வேண்டும் என முதலமைச்சர் கேட்டுக் கொண்டார்.