உதகையில் குதிரை பந்தயம் நடத்துவதற்கு நிலங்களை கையகப்படுத்த மக்கள் எதிர்ப்பு

கோத்தகிரி அருகே குதிரை பந்தயம் நடத்துவதற்கு, நிலங்களை கையகப்படுத்துவதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

உதகையில் உள்ள குதிரை பந்தயம் மைதானத்தை மெட்ராஸ் ரேஸ் கிளப் நடத்தி வருகின்றது. இந்த மைதானத்தின் 5 ஏக்கர் நிலமானது உதகை நகராட்சிக்கு சொந்தமானது. இதனிடையே உதகை நகராட்சிக்கு மெட்ராஸ் ரேஸ் கிளப் கடந்த சில ஆண்டுகளாக கட்டண பாக்கியாக சுமார் 640 கோடி ரூபாயை நகராட்சிக்கு செலுத்தாமல் இருந்து வந்துள்ளது.

இந்நிலையில், மாவட்டத்தின் சார்பில் சென்னை உயர் நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில், உயர்நீதிமன்றமானது குதிரை பந்தயம் நடத்த மாவட்டத்தில் மாற்று இடம் தேர்வு செய்யும் படி ஆணையிட்டது. அதன்படி, கோத்தகிரி கடைக்கம்பட்டி கிராமத்தில் உள்ள மைதானத்தில் குதிரை பந்தயம் நடைபெறுவதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டு, நிலம் அளவிடும் பணி நடைபெறுவதாக இருந்தது.

ஆனால் இதற்கு பொதுமக்கள் மறுப்பு தெரிவித்து, கருப்பு பேட்ஜ் அணிந்தும், தங்கள் ஊர்ப் பகுதிகளில் கருப்புக்கொடி கட்டியும் தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். பின்னர், மெட்ராஸ் ரேஸ் கிளப் அதிகாரிகள், ஊர் பொது மக்களிடையே தாங்கள் இந்த இடத்தை தேர்வு செய்யப்போவதில்லை என்றும் உறுதியளித்தனர்.

Exit mobile version