பிரதமரால் பாராட்டப்பட்ட மதுரை மாணவி நேத்ரா, தனக்கு நன்கொடையாக வந்த 4 லட்ச ரூபாயையும் மீண்டும் ஏழை மக்களுக்கு வழங்கிய செயலை பலரும் பாராட்டியுள்ளனர்.
மதுரை மேலமடை பகுதியைச் சேர்ந்த சலூன் கடை உரிமையாளர் மோகனின் மகளான நேத்ரா, எதிர்க்காலத்திற்காக சேமித்து வைத்திருந்த 5 லட்ச ரூபாயை எடுத்து, கொரோனா காரணமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு காரணமாக வேலை இழந்த ஏழை, எளிய மக்களுக்கு உதவி செய்தார். நேத்ராவின் செயலை பிரதமர் மோடி, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட பலர் பாராட்டினர்.
இதையடுத்து, பல தன்னார்வலர்கள் தாமாக முன்வந்து மாணவியின் எதிர்காலத்திற்காக 4 லட்ச ரூபாய் அளவிற்கு நன்கொடை வழங்கினர். ஆனால், மாணவி நேத்ரா, தனக்கு அளிக்கப்பட்ட நன்கொடை பணத்தையும் செலவு செய்து ஏழை, எளிய மக்களுக்கு நிவாரண பொருட்கள் வாங்கி கொடுத்துள்ளார். இதனிடையே, மாவட்ட குழந்தைகள் நலக்குழு சார்பாக மாணவி நேத்ராவுக்கு பாராட்டு சான்றிதழும், பதக்கமும் வழங்கப்பட்டது.