ரெம்டெசிவிர் மருந்துக்காக அல்லாடும் தமிழக மக்கள்

தமிழ்நாட்டில் ரெம்டெசிவிர் மருந்துக்கு கடும் தட்டுப்பாடு நிலவும் நிலையில், பல்வேறு மாவட்டங்களில் உறவினர்களுக்கு உரிய நேரத்தில் மருந்து வழங்க முடியாமல் பொதுமக்கள் திண்டாடி வருகின்றனர். அதே நேரத்தில் மனசாட்சியை தொலைத்து கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு விற்கும் மனசாட்சியற்ற செயலும் அதிகரித்து வருகிறது.

கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கி நுரையீரல் பாதித்த நோயாளிகளுக்கு ரெம்டெசிவிர் மருந்து கொடுக்கப்படுகிறது. இதற்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் ரெம்டெசிவிரை வாங்க கூட்டம் முண்டியடித்து வருகிறது. நாள் ஒன்றுக்கு 300 பேருக்கு மட்டுமே வழங்கப்படுவதால், பலர் கண்ணீரோடு காத்திருக்கும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.

கோவை அவினாசி சாலையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில், நாளொன்றுக்கு சுமார் 60 நபர்களுக்கு டோக்கன்கள் தரப்பட்டு, ரெம்டெசிவிர் மருந்து விநியோகம் செய்யப்பட்டது. கொரோனா பரிசோதனை சான்று, ‘CT’ ஸ்கேன் சான்று, மருத்துவரின் பரிந்துரை கடிதம் மற்றும் மருந்து வாங்க வருபவரின் ஆதார் அட்டை ஆகிய ஆவணங்களை சரிபார்த்த பின்னரே ரெம்டெசிவிர் வழங்கப்படும் நிலையில், இதை அறியாமல் வந்தவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்.ஒருபுறம் ரெம்டெசிவிரை வாங்க மக்கள் போராடி வரும் நிலையில், மறுபுறமோ கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு விற்கப்படும் மனசாட்சியற்ற செயலும் பெருகி வருகிறது.

செங்கல்பட்டு மாவட்டம், வண்டலூர் பகுதியில் கள்ளச்சந்தையில் ரெம்டெசிவிர் மருந்து விற்பனை செய்த விஷ்ணுகுமார் என்பவரை தனிப்படை போலீசார் அண்மையில் கைது செய்தனர். அவர் அளித்த தகவலின் பேரில், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக ரெம்டெசிவிர் மருந்து குப்பிகள் பதுக்கி வைத்திருந்த இருவரை காவல்துறையினர் கைது செய்தனர். 42 ரெம்டெசிவிர் மருந்து குப்பிகளை பறிமுதல் செய்த போலீஸார், காந்தி நகரைச் சேர்ந்த சண்முகம், அவரது சகோதரர் கணேசன் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்தனர்.முதற்கட்ட விசாரணையில் மதுரை, நெல்லையில் இருந்து ரெம்டெசிவிர் மருந்துகளை வாங்கி வந்து 35 ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

தொடர்ந்து, பாரிமுனையில் மருந்துக்கடை வைத்துள்ள புவனேஷ் மற்றும் வட மாநிலத்தை சேர்ந்த நித்திஷ் என மேலும் இருவர் கைது செய்யப்பட்டனர். பங்களாதேஷ் நாட்டில் ரெம்டெசிவிர் மருந்தை மொத்தமாக ஆர்டர் செய்து, சென்னையில் விஷ்ணுகுமார் என்பவர் மூலமாக 23 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்தது விசாரணையில் அம்பலமானது. அவர்களிடமிருந்து 145 ரெம்டெசிவிர் மருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டது. கள்ளச்சந்தையில் ரெம்டெசிவிர் தாராளமாக புழங்குவதை தடுத்து, மையங்கள் மூலம் தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Exit mobile version