மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் சித்திரை திருவிழா ஏப்ரல் 8ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்க உள்ளது. முக்கிய நிகழ்வான தேரோட்டம் ஏப்ரல் 18ம் தேதி மக்களவை தேர்தல் நடைபெறும் நாளில் நடைபெற உள்ளது.
நாடு முழுவதும் 7 கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைபெறவுள்ளது. தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 18ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. அன்றைய தினம் மதுரையில் பிரசித்தி பெற்ற மீனாட்சியம்மன் கோயில் சித்திரை திருவிழா தேரோட்டம் நடைபெறுகிறது.ஏப்ரல் 8ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கவுள்ள சித்திரை திருவிழா, 17 நாட்கள் நடைபெற்று 24ம் தேதியுடன் முடிவடைகிறது. விழாவின் முக்கிய நிகழ்வுகளாக ஏப்ரல் 17ம் தேதி திருக்கல்யாணமும், 18ம் தேதி தேரோட்டமும் நடைபெறுகிறது. இதையடுத்து 19ம் தேதி கள்ளழகர் வைகையாற்றில் இறங்கும் வைபவம் நடைபெறவுள்ளது. இதில் தென் மாநிலங்களை சேர்ந்த சுமார் 5லட்சம் பேர் கலந்து கொள்வார்கள்.மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு நாளான ஏப்ரல் 18ல் தேரோட்டம் நடைபெறவுள்ளது. எனவே, தேர்தலை தள்ளி வைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.