பதவியில் இருந்தபோது நாட்டு மக்களுக்கு எதையும் செய்யாத திமுக மீண்டும் தேவையில்லை, அதிமுகவே போதுமென்று மக்கள் முடிவெடுத்துவிட்டார்கள் என முதலமைச்சர் கூறியுள்ளார்.
கூடலூரில் அதிமுக வேட்பாளர் பொன். ஜெயசீலனை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். கூடியிருந்த தொண்டர்கள் மத்தியில் பேசிய முதலமைச்சர், மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்தவுடன், கூடலூர் அருகே சுமார் 442 கோடி ரூபாய் மதிப்பில் உலக தரத்தில் கட்டப்படும் மருத்துவக்கல்லூரி திறந்து வைக்கப்படும் என தெரிவித்தார். வீடு இல்லாதவர்களுக்கு அரசே நிலம் வாங்கி கான்கிரீட் வீடு கட்டித்தரும் என்றும், யானை வழித்தடங்களில் வசிக்கும் மக்கள் பட்டா மற்றும் மின்சார வசதிகோரி மனு அளித்துள்ளதாகவும், அதற்கு உரிய தீர்வு காணப்படும் எனவும் முதலமைச்சர் தெரிவித்தார். இந்த தேர்தல் பிரசாரத்தில் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கலந்து கொண்டார்.
அதன்பிறகு, குன்னூரில் பிரசாரம் மேற்கொள்ள தனி ஹெலிக்காப்டரில் வந்த முதலமைச்சரை, அதிமுக நிர்வாகிகள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். அங்கிருந்து பிரசார வாகனத்தின் மூலம் பொதுமக்கள் திரண்டிருந்த இடத்திற்கு சென்ற முதலமைச்சர், குன்னூர் தொகுதி அதிமுக வேட்பாளர் கப்பச்சி வினோத், உதகமண்டலம் தொகுதி பாஜக வேட்பாளர் போஜராஜன் ஆகியோருக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார். அப்போது பேசிய முதலமைச்சர், தன் வீட்டு மக்களை மட்டுமே பார்க்கும் கட்சி திமுக என்றும் நாட்டு மக்களை பார்க்கும் கட்சி அதிமுக என்றும் கூறினார். மேலும், நீலகிரி மாவட்டம் சர்வதேச சுற்றுலாத்தலமாக அறிவிக்கப்படும் என உறுதியளித்தார்.
வேண்டுமென்றே திட்டமிட்டு பொய்ப்பேசி, மக்களை குழப்பி, ஏமாற்றி அதன்மூலம் ஆட்சிக்கு வர ஸ்டாலின் துடிக்கிறார் என குற்றம்சாட்டிய முதலமைச்சர், மக்கள் விழிப்போடு இருப்பதால் அது ஒருபோதும் நடக்காது என்றார். பதவியில் இருந்தபோது நாட்டு மக்களுக்கு எதையும் செய்யாத திமுக வேண்டாம், மீண்டும் அதிமுகவே வேண்டுமென மக்கள் முடிவெடுத்துவிட்டார்கள் என்றும் முதலமைச்சர் குறிப்பிட்டார்.
அதேபோல தேயிலை தொழிலாளர்களுக்கு கூலி உயர்த்தி வழங்கப்படும் என்றும், உற்பத்தியாளர்களுக்கு தேயிலை விலை உயர்த்தி நிர்ணயிக்கப்படும் என்றும் முதலமைச்சர் உறுதியளித்தார்.