ஜனநாயக நாட்டில் மக்கள் யாரை விரும்புகிறார்களோ அவர்களே ஆட்சியில் அமர முடியும் என்று நடிகர் கமலஹாசனுக்கு, மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி பதிலடி கொடுத்துள்ளார்.
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் சார்பாக நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நாமக்கல்லில் நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியர் ஆசியா மரியம் தலைமையில் நடைபெற்ற விழாவில், மின்சாரத் துறை அமைச்சர் தங்கமணி மற்றும் சத்துணவு திட்டத்துறை அமைச்சர் சரோஜா ஆகியோர் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.
ஆயிரத்து 490 பேருக்கு 70 லட்ச ரூபாய் மதிப்பிலான உதவிகள் வழங்கப்பட்டன.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் தங்கமணி, அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு தேவையான மின்சாரம் வாங்க, தமிழ்நாடு மின்சார ஒழுங்கு முறை ஆணையத்திடம் அனுமதி பெற்றுள்ளதாக தெரிவித்தார்.
மின்சார கட்டணத்துடன் ஜிஎஸ்டியை சேர்ப்பது தொடர்பாக மத்திய அரசு முடிவு செய்யும் என்று அவர் கூறினார்.
டாஸ்மாக் கடைகளில் ஸ்வைப் இயந்திரம் வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக குறிப்பிட்ட அமைச்சர் தங்கமணி, ஜனநாயக நாட்டில் மக்கள் யாரை விரும்புகிறார்களோ அவர்களே ஆட்சியமைக்க முடியும் என்று நடிகர் கமலஹாசனுக்கு பதிலடி கொடுத்தார்.