கொரோனா பரவலை தடுக்க அரசு அறிவிக்கும் வழிமுறைகளை பொதுமக்கள் முழுமையாக கடைபிடித்தால், விரைவில் இயல்பு நிலைக்கு திரும்பலாம் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்ற முதலமைச்சர், புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், புதிய கட்டடங்களை திறந்தும் வைத்தார். பின்னர், 3 ஆயிரத்து 500 பயனாளிகளுக்கு 3 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் வழங்கினார்.
பின்னர், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஆலோசனை நடத்தினார். அப்போது பேசிய அவர், தமிழக அரசு மேற்கொண்ட சிறப்பான நடவடிக்கையால் தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைவோர் சதவீதம் அதிகரித்துள்ளதாகவும், இறப்பு விகிதம் குறைந்துள்ளதாகவும் கூறினார். அரசின் அறிவுரையை பொதுமக்கள் கடைபிடித்தால் இயல்பு நிலைக்கு திரும்பலாம் எனவும், கொரோனா பரவலைத் தடுக்க அரசுக்கு மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் முதலமைச்சர் கேட்டுக் கொண்டார்.
தமிழகத்தில் படிப்படியாக பரிசோதனை அதிகரிக்கப்படுவதாகவும், தமிழகத்தில்தான் அதிகளவில் பரிசோதனை நடத்தப்பட்டு வருவதாகவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
நோய் பரவல் தமிழகத்தில் ஏற்பட்டவுடன் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கக் கூடாது என்பதற்காக அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு, ஆயிரம் ரூபாய் நிவாரணம் மற்றும் விலையில்லா ரேஷன் பொருட்கள் வழங்கிப்பட்டதாக முதலமைச்சர் கூறினார். நவம்பர் மாதம் வரை விலையில்லா அரிசி கூடுதலாக வழங்கப்பட்டு வருவதாகவும் முதலமைச்சர் கூறினார்.
தமிழகத்தில் வேளாண் பணிகள் சிறப்பான முறையில் நடைபெற்று வருவதாகவும், விளைபொருட்களை சந்தைக்கு எடுத்துச் செல்வதில் எந்த தடையும் இல்லை என்றும் முதலமைச்சர் குறிப்பிட்டார்.