அரசை மக்கள் எளிதாக அணுகி அவர்களது குறைகளுக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும் என்ற உன்னத நோக்கத்திற்காக முதலமைச்சரின் தனிப்பிரிவு உருவாக்கப்பட்டது. சென்னை தலைமை செயலகத்தில் இயங்கும் முதலமைச்சர் தனிப்பிரிவில், பொதுமக்களிடம் இருந்து மனுக்கள் பெறப்பட்டு உடனடியாக துறைசார்ந்த அதிகாரிகளுக்கு அனுப்பப்படுகிறது.
முதலமைச்சரின் தனிப்பிரிவில் வழங்கப்படும் மனுக்கள் நேரடியாக முதலமைச்சரிடமே வழங்குவது போல் என்பதால், குறைகள் மற்றும் கோரிக்கைகள் மீது மின்னல் வேகத்தில் தீர்வு காணப்படுகிறது. இது தவிர கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் முகாம் அலுவலகத்தில் பெறும் மனுக்களும், அரசு விழாக்கள் மற்றும் பொது நிகழ்ச்சிகளில் பெறப்படும் மனுக்கள் என அனைத்தும் முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு அனுப்பி தீர்வு காணப்படுகிறது.
எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக பொறுப்பேற்ற நாள் முதல் முதலமைச்சரின் தனிப்பிரிவில், பொதுமக்கள் வழங்கும் மனுக்கள் மீது தீர்வு காணும் நடவடிக்கைகள் அதிகரித்துள்ளன. தமிழக வரலாற்றில் வேறு எந்த ஆட்சியில் நடைபெறாத வண்ணம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்ற 2017-ம் ஆண்டு, முதலமைச்சரின் தனிப்பிரிவில் வழங்கப்பட்ட அனைத்து மனுக்கள் மீதும் நடவடிக்கை எடுத்து தமிழக அரசு இமாலய சாதனையை படைத்தது.
மக்களின் மனுக்களை நிராகரிக்கும் வழக்கத்தை குறைக்க வேண்டும் என்ற முதலமைச்சரின் உத்தரவுப்படி கடந்த 2014-15ம் ஆண்டுகளில் 34 சதவீதமாக இருந்த மனுக்கள் ஏற்பு, 2018-ம் ஆண்டு 50 சதவீதத்தை தொட்டு மற்றொரு சாதனைக்கு சொந்தக்காரராக உருவெடுத்துள்ளார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.
2018ஆம் ஆண்டை பொறுத்த வரை முதலமைச்சரின் தனிப்பிரிவில் பெறப்பட்ட 2 லட்சத்து 8 ஆயிரத்து 216 மனுக்களில், ஒரு லட்சத்து ஆயிரத்து 738 மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு பொதுமக்களின் குறைகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. ஒரு லட்சத்து 4 ஆயிரத்து 525 மனுக்கள் விசாரிக்கப்பட்டு நிராகரிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள ஆயிரத்து 953 மனுக்கள் விசாரணைக்காக நிலுவையில் உள்ள நிலையில், 99 சதவீத மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
2019ஆம் ஆண்டை பொறுத்த வரை ஜூலை 26ம் தேதியுடன் ஒரு லட்சத்து 25 ஆயிரத்து 550 மனுக்கள் பெறப்பட்டு, அதில் 49 ஆயிரத்து 574 மனுக்களை விசாரித்து குறைகள், கோரிக்கைகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. 45 ஆயிரத்து 380 மனுக்கள் விசாரிக்கப்பட்டு நிராகரிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 24 சதவீத மனுக்கள் விசாரணைக்காக நிலுவையில் உள்ளன. கடந்த ஆண்டுகளை போல இந்தாண்டும் பொதுமக்களின் மனுக்கள் மீது 100 சதவீத நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அதிகாரிகளின் குறிக்கோளாக உள்ளது.
சாமானியர்கள் எளிதில் அணுக கூடிய அரசால் மட்டுமே மக்களின் குறைகளுக்கு தீர்வு காணக்கூடும். அந்த வகையில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வழியில் நல்லாட்சி நடத்தும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அரசு, மக்களின் அரசு என்பதை மீண்டும் நிரூபித்துள்ளது. நியூஸ் ஜெ செய்திகளுக்காக செய்தியாளர் சிவாவுடன் வெங்கடேஷ்…