ரெம்டெசிவிர் மருந்து கேட்டு மக்கள், அரசுக்கு தொல்லை கொடுப்பதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் கூறியுள்ளது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் கொரோனா தொற்று அதிகரித்துள்ள நிலையில், பலி எண்ணிக்கையும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. கொரோனா நோயாளிகளுக்காக, மருத்துவர்கள் பரிந்துரைக்கும் ரெம்டெசிவிர் மருந்துகளை வாங்குவதற்காக, மக்கள் மணிக்கணக்கில் காத்துக்கிடக்கும் நிலை உருவாகியுள்ளது. கொரோனா தொற்றுக்கு ஆளானவர்களின் உயிரைக் காக்க, இரவு பகலாக மக்கள் வரிசையில் காத்திருக்கின்றனர். ஆனால், ஒருசிலருக்கு மட்டும் மருந்துகள் வழங்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்தநிலையில், சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், ரெம்டெசிவிர் மருந்து கேட்டு மக்கள் அரசுக்கு தொல்லைக்கொடுத்து வருவதாகவும், அவர்களால் அரசுக்கு தொல்லைதான் என அலட்சியமாக பதிலளித்தார்.
மருத்துவமனையில் உயிருக்குப் போராடும் கொரோனா நோயாளிகளின் உயிரை காப்பாற்றுவதற்காக, ரெம்டெசிவிர் மருந்துவாங்க வரும் மக்களைப் பார்த்து அரசுக்கு தொல்லை கொடுப்பவர்கள் என, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.