தமிழகத்தின் பல இடங்களில் பரவலாக மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி!!

தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் பரவலாக மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது.

சேலம் மாவட்டம் சங்ககிரி, பொன்னம்பாளையம், கோனேரிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதனால் மகிழ்ச்சியடைந்த பொதுமக்கள் மழை நீரை, பெரிய டிரம்புகளில் சேமித்தனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம், நைனார் பாளையம், மேல்நாரியப்பனூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் சாலைகளில் மழை நீர் வெள்ளம் போன்று பெருக்கெடுத்து ஓடியது.

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில தினங்களாக வெயிலின் தாக்கம் அதிகம் இருந்தது. இந்நிலையில், அப்பகுதிகளில் திடீரென மழை பெய்ததால், வெப்பம் தணிந்து, குளிர்ச்சியான சூழல் நிலவியது.

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி, வெண்குன்றம், பாதிரி, தாழம்பள்ளம் உள்ளிட்ட பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்தது. இதேபோன்று கீழ் பென்னாத்தூர், கானலாபாடி, கருங்காலி குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம், கோட்டைமேடு, குப்பாண்டபாளையம் ராசிபுரம், ஆர்.புதுப்பாளையம், சீராப்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் 2 மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது.

மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம், மங்கநல்லூர், மணல்மேடு, கோமல் பாலையூர் உள்ளிட்ட இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த மழையால், சம்பா சாகுபடி விதை விதைப்பில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

நாகை மாவட்டம் சீர்காழி, வைத்தீஸ்வரன் கோயில், கொள்ளிடம், திருவெண்காடு உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது. வெயில் வாட்டி வந்த நிலையில், திடீரென பெய்த மழையால் அப்பகுதி முழுவதும் குளிர்ச்சி நிலவியது.

இதேபோன்று ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளி சுமார் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக மழை பெய்தது. தொடர் மழையால் மானாவரி நிலத்தில் விவசாயிகள் விவசாய பணிகளை மேற்கொண்டனர்.

மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் மழையால் தேனி மாவட்டம் மஞ்சளாறு அணைக்கு மேற்பகுதியில் உள்ள எலிவால் அருவியில் தண்ணீர் வெள்ளியை உருக்கியது போன்று கொட்டத் தொடங்கியுள்ளது. இதனால் மஞ்சளாறு அணையும், எலிவால் அருவியும் ரம்மியமாக காட்சியளிக்கிறது.

Exit mobile version